February 7, 2026

குட்டிகளுடன் இறக்கும் யானைகள் – கோவையில் தொடரும் சோகம்

கோவை மருதமலையில் உயிரிழந்த யானையின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள்.  (கோப்புப் படங்கள்)

கோவை மருதமலையில் உயிரிழந்த யானையின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள். (கோப்புப் படங்கள்)

கோவை: காட்டை நாள்தோறும் இயற்கையாக விரிவாக்கம் செய்பவை காட்டு யானைகள். தினசரி உணவுக்காக பல கி.மீ. சுற்றித்திரிந்து உணவை உண்டு, செரித்து அதன் சாணத்தில் எஞ்சும் விதைகள் மூலம், காட்டை விரிவு செய்யும் பணியில் அவை தொடர்ந்து ஈடுபடுகின்றன.

எங்கு யானைகள் அதிகளவில் வாழ்கிறதோ, அங்கு காட்டின் சூழல் பாதுகாப்பாக உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் சமீப காலமாக கோவை மாவட்ட வனப்பகுதிகளில் யானைகளின் உயிரிழப்புகள் வன உயிரின ஆர்வலர்களை கவலை அடையச் செய்துள்ளன.

கோவை மதுக்கரை பகுதியில் 13 மாத கருவுடன் இருந்த பெண் யானை நேற்று முன் தினம் உயிரிழந்ததை போன்று, கடந்த ஆண்டு மருதமலையில் 16 வயதுடைய கர்ப்பம் தரித்திருந்த பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் அருகிலேயே 2 முதல் 3 வயது மதிக்கத்தக்க குட்டியானை பரிதவித்து நின்றதை பலரால் இன்னும் மறக்க முடியாது.

அதேபோல பல ஆண்டுகளுக்கு முன்பு கோவை தடாகத்திலும் பெண் யானை வயிற்றில் இருந்த குட்டியுடன் உயிரிழந்தது. கோவை மருதமலை பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, “மருதமலை பகுதியில் கடந்த மே மாதம் பெண் யானை உயிரிழந்தது.

அந்த யானை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இறந்த யானையை உடற்கூராய்வு செய்தபோது, அதன் கர்ப்பப் பையில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானையும் உயிரிழந்தது, பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. யானையின் பெருங்குடலில் இருந்த சாணத்தில் பிளாஸ்டிக், அலுமினிய கழிவுகள் இருந்தன.

ரசாயனம் நிறைந்த பிளாஸ்டிக் கழிவுகள், கெட்டுப்போன உணவுக் கழிவுகளை சாப்பிட்டதால் யானை உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது கோவை மதுக்கரையில் 13 மாத கருவுடன், பெண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் உண்டாக்கி உள்ளது” என்றனர்.

வனத்துறையினர் கூறும்போது, “குப்பனூரில் சேற்றில் இருந்து யானை மீட்கப்பட்ட போது கருவுற்றிருக்கலாம் என சந்தேகித்தோம். யானையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் சிகிச்சை அளித்தோம். 25 பாட்டில் குளுக்கோஸ், ராகி, புளி, உப்பு, மாத்திரைகளும் சேர்த்து கொடுத்தோம். தர்பூசணி, கரும்பு, பப்பாளி மற்றும் வாழைப் பழங்களை கொடுத்தோம். நன்றாக சாப்பிட்ட நிலையில் 13 கி.மீ. தூரம் பயணம் செய்து, எட்டிமடை பகுதிக்கு வந்து இறந்துள்ளது” என்றனர்.

கால்நடை தலைமை மருத்துவர் வெண்ணிலா கூறுகையில், “வயிறு பெரியதாக இருந்ததாலும், பெண் யானை என்பதாலும் கர்ப்பத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை மருந்துகளுடன் சிகிச்சையை தொடங்கினோம். உள்ளுறுப்புகள் சேதம் அடைந்ததுதான் பெரும் பிரச்சினையாக இருக்கும். ஒரு சில யானைகள் கர்ப்பம் தரிக்கும் நேரத்தில் கூட எப்போதும் போல் தான் இருக்கும். 18 மாதங்கள் முதல் 22 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் பிரசவிக்கலாம்” என்றார்.

முன்னாள் வனத்துறை அலுவலர் ஜா.ஜோசப் கூறியதாவது: யானைகளுக்கு நினைவாற்றல் மிக அதிகம். அதன் வழித்தடங்கள் அழிந்தபிறகு, அவை மன அழுத்தத்தில் வாழ்கின்றன என்பதே உண்மை. பாதை தடைபடும்போது, அவை மூர்க்கமாகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் குப்பையுடன், உணவும் கொட்டப்படும்போது, யானைகள் வந்து பழகிவிட்டால் அவை மீண்டும் வரத் தொடங்கிவிடும்.

தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பிரச்சினையாக இருக்கின்றன. மனிதன் – யானை மோதல் உயிரிழப்புகளும், யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் ஏற்படும் உயிரிழப் புகளும் தொடர்கின்றன. காட்டு விலங்குகளை பாதுகாக்க, கால்நடை மருத்துவத்திலும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டியது அவசியமானதாகும், என்றார்.

Spread the love