February 27, 2026

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 – வெற்றி நெருக்கடியில் இந்திய அணி!

– சேப்​பாக்​கத்​தில் ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 - வெற்றி நெருக்கடியில் இந்திய அணி!

Follow Us

சென்னை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது 2-வது ஆட்​டத்​தில் ஜிம்​பாப்வே அணி​யுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறுகிறது.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி சூப்பர் 8 சுற்​றில் தனது முதல் ஆட்​டத்​தில் தென் ஆப்பிரிக்க அணி​யிடம் 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. அந்த ஆட்​டத்​தில் 88 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 18.5 ஓவர்​களில் 111 ரன்களுக்கு சுருண்​டிருந்​தது. இந்த தோல்​வி​யால் இந்​திய அணி​யின் நிகர ரன் ரேட் -3.800 ஆக உள்​ளது.

இதனால் அரை இறு​திக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை பெற வேண்​டு​மா​னால் இந்​திய அணி இன்றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் பெரிய அளவி​லான வெற்​றிகளை குவித்​தாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யில் உள்​ளது. டாப் ஆர்​டரில் அபிஷேக் சர்மா​வின் மோச​மான பார்ம் அணி​யின் செயல் திறனை வெகு​வாக பாதித்துள்​ளது.

அவர், 4 ஆட்​டங்​களில் 3-ல் டக் அவுட் ஆகி​யிருந்​தார். தென் ஆப்பிரிக்கா​வுக்கு எதி​ராக 15 ரன்​கள் சேர்த்​திருந்​தார். நடப்பு தொடரில் அபிஷேக் சர்​மாவுடன் சராசரி 3.75 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 75 ஆகவும் உள்​ளது. மந்​த​மான ஆடுகளம், பவர்​பிளே​வில் சுழற்​பந்து வீச்​சாளர்​கள் வேகத்தை குறைத்து வீசுவது உள்​ளிட்​டவை அபிஷேக் சர்மாவுக்கு கடும் சவால்​களை அளித்து வரு​கின்​றன.

லீக் சுற்​றில் இஷான் கிஷன் அதிரடி​யாக விளை​யாடி ரன்கள் குவித்​த​தால் அபிஷேக் சர்மா விரை​விலேயே ஆட்டமிழந்த போதி​லும் அது பெரிய அளவில் அணி​யின் செயல் திறன் தாக்​கத்தை ஏற்​படுத்​தாமல் இருந்​தது.

ஆனால் சூப்​பர் 8 சுற்​றில் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இஷான் கிஷன் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தது நெருக்​கடியை உரு​வாக்​கியது. 3-வது வீரராக களமிறங்கி வரும் திலக் வர்​மா​விடம் இருந்​தும் தொடர்ச்​சி​யாக பெரிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்பட​வில்​லை.

பந்​துகளுக்கு நிக​ராக மட்​டுமே ரன்​கள் சேர்க்​கும் அவர், சூழ்​நிலைக்கு தகுந்​த​படி தாக்​குதல் ஆட்​டம் மேற்கொள்ளாததும் பாதிப்பை ஏற்​படுத்தி உள்​ளது. நடப்பு தொடரில் அவரது ஸ்டிரைக் ரேட் 118 ஆக இருக்​கிறது. இது நவீன​கால டி20 கிரிக்​கெட்​டில் பவர்​பிளே​வில் மிக குறைந்த ஸ்டிரைக் ரேட்​டாக பார்க்​கப்​படு​கிறது.

மேலும் இவர்​கள் 3 பேருமே இடதுகை பேட்​ஸ்​மேன்​கள் என்ப​தால் எதிரணி​யினர் களவியூ​கங்களை எளி​தாக அமைப்​ப​தாக​வும் கருத்து எழுந்​துள்​ளது. இதற்கு இன்றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி தீர்வு காணக்​கூடும். அநேகமாக அபிஷேக் சர்மா அல்​லது திலக் வர்மா நீக்கப்பட வாய்ப்பு உள்​ளது.

இவர்​களுக்கு பதிலாக டாப் ஆர்​டரில் சஞ்சு சாம்​சன் களமிறங்​கக்​கூடும். இதற்கு தகுந்​த​வாறு கடந்த 2 நாட்களாக சஞ்சு சாம்​சன் தீவிர பேட்​டிங் பயிற்​சி​யில் ஈடுபட்​டுள்​ளார். கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ், ஆல்ரவுண்டர் ஹர்​திக் பாண்​டியா ஆகியோ​ரும் கூடு​தல் பொறுப்​புடன் செயல்​பட்டு ரன்​களை குவிப்​ப​தில் கவனம் செலுத்தக்​கூடும்.

சூர்​யகு​மார் யாதவ் நடப்பு தொடரில் 180 ரன்​கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 127 ஆக மட்​டுமே இருக்​கிறது. இதை, அவர் கவனத்​தில் எடுத்துக்கொள்ளக்கூடும். டாப் 3 பேட்​ஸ்​மேன்​கள் 3 பேரும் இடது கை வீரர்​களாக இருப்​ப​தால் இன்​றைய ஆட்​டத்​தில் சூர்​யகு​மார் யாதவ் 3-வது வீர​ராக களமிறங்​கு​வது குறித்தும் சிந்​திக்​கக்​கூடும்.

பந்​து​வீச்​சில் கடந்த ஆட்​டத்​தில் ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங் வேகக்​கூட்​டணி சிறப்​பாக செயல்​பட்டு இருந்​தது. ஒரு கட்​டத்​தில் எதிரணியை 20 ரன்​களுக்கு 3 விக்​கெட்​கள் என கட்​டுப்​படுத்​திய இந்​திய அணி அதன் பின்​னர் கட்டுக்கோப்​புடன் செயல்​படத் தவறியது.

வருண் சக்​ர​வர்த்​தி, ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் அதிக ரன்​களை வாரி வழங்கினர். அதி​லும் வருண் சக்​ர​வர்த்தி 47 ரன்​களை​யும், ஹர்​திக் பாண்​டியா 45 ரன்​களையும் தாரை வார்த்து இருந்தனர். இதில் ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே ஆகியோர் நோபால்​களை​யும் வீசி​யிருந்​தனர்.

இந்த நோபால்​களும், ஹர்​திக் பாண்​டியா கடைசி ஓவரில் வாரி வழங்​கிய 20 ரன்​களும் பெரிய வித்​தி​யாசத்தை ஏற்படுத்​தி​யிருந்​தன. இன்​றைய ஆட்​டத்​தில் பந்​து​வீச்​சில் மாற்​றங்​கள் இருக்க வாய்ப்பு உள்​ளது. வாஷிங்​டன் சுந்தருக்கு பதிலாக அக்​சர் படேல் களமிறங்​கக்​கூடும்.

சிகந்​தர் ராசா தலை​மையி​லான ஜிம்​பாப்வே அணி லீக் சுற்​றில் தோல்​வியை சந்​திக்​காமல் சூப்​பர் 8 சுற்​றில் கால்பதித்து அனை​வரை​யும் வியக்​க​வைத்​திருந்​தது. எனினும் அந்த அணி சூப்​பர் 8 சுற்​றின் முதல் ஆட்​டத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யிடம் 107 ரன்​கள் வித்தியாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த தோல்​வி​யால் ஜிம்​பாப்வே அணி​யின் நிகர ரன் ரேட் -5.350 ஆக உள்​ளது.

ஜிம்​பாப்வே அணி அரை இறு​திக்கு முன்​னேற வேண்டுமானால் இன்​றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் பெரிய அளவி​லான ரன் ரேட் வித்தியாசத்துடன் வெற்றி பெற வேண்​டும். மேலும் மற்ற ஆட்​டங்​களின் முடிவுக்​காக​வும் காத்​திருக்க வேண்​டும்.

ஜிம்​பாப்வே அணி​யில் சுழற்​பந்து வீச்​சாளர்​களாக கிரேம் கிரீமர், சிகந்​தர் ராசா, ரியான் பரூல் ஆகியோர் உள்​ளனர். எனினும் இந்த சுழற்​பந்து வீச்சு கூட்​டணி இந்​திய அணியின் பேட்​டிங் வரிசைக்கு சவால் கொடுக்​கக்​கூடிய அளவில் வலு​வான​தாக இல்லை என்றே கூறப்​படு​கிறது. அதேவேளை​யில் வேகப்​பந்து வீச்​சில் பிளெசிங் முசாராபானி, ரிச்​சர்டு நரவா, பிராட் இவான்ஸ் ஆகியோர் அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

திருந்​து​வாரா அபிஷேக் சர்மா?

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா 3 ஆட்டத்​தில் ரன் ஏதும் எடுக்​காமல் முதல் ஓவரிலேயே ஆட்ட​மிழந்​தார். சூப்​பர் 8 சுற்​றில் அவர், 15 ரன்​கள் சேர்த்த நிலை​யில் பவர்​பிளே​விலேயே நடையை கட்​டி​னார். எதிரணி​யினர் விரிக்​கும் வலை​யில் அவர், சரி​யாக சிக்குகிறார்.

எந்த ஒரு கட்​டத்​தி​லும் அவர், தனது ஆட்ட பாணியை மாற்றிக் கொள்ள முயற்​சிக்​காதது பலவீன​மாக மாறி உள்ளது. ஆனால் அபிஷேக் சர்மா போன்றே அதிரடி பாணியை கடைபிடிக்​கக் கூடிய இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் ஹாரி புரூக் நேற்று முன்​தினம் சுழலுக்கு சாதகமான பல்​லேகலே மைதானத்​தில் பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அற்​புத​மாக விளையாடினார்.

சுழற்​பந்து வீச்​சில் ஹாரி புரூக் சிறப்​பாக விளை​யாடக்​கூடிய​வர் அல்ல. ஆனால் பாகிஸ்​தானின் சுழற்​பந்து வீச்சு படையை மிரள​வைத்​தார். தற்​காப்பு ஆட்​டத்​துக்​கும், ஆக்ரோஷ ஆட்​டத்​துக்​கும் இடை​யில் தன்னை அற்​புத​மாக நிலை நிறுத்​தி​னார்.

சுழற்​பந்து வீச்​சில் தற்​காப்பு ஆட்​டம் மேற்​கொள்ள வேண்டிய இடத்​தில் அதை செய்​தார். ஆக்​ரோஷம் காட்ட வேண்​டிய இடத்​தில் பந்​துகளை வெளுத்து வாங்கி சதம் அடித்து அணி​யின் வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பை வழங்​கி​னார். இதில் இருந்து அபிஷேக் சர்மா பாடம் கற்றுக்​கொள்​ளக்​கூடும்.

ஆடு​களம் எப்​படி?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் நியூஸிலாந்து – ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதிய லீக் ஆட்​டத்​துக்கு பயன்​படுத்​தப்​பட்ட அதே ஆடுகளமே இன்று இந்​தியா – ஜிம்​பாப்வே அணி​கள் மோதும் ஆட்​டத்​துக்​கும் பயன்​படுத்​தப்பட உள்​ளது.

நியூஸிலாந்து – ஆப்​கானிஸ்​தான் போட்டி காலை 11 மணிக்கு நடத்​தப்​பட்​டிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 183 ரன்கள் இலக்கை விரட்​டிய நியூஸிலாந்து 13 பந்​துகளை மீதம் வைத்து 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்றிருந்​தது. இந்த உலகக் கோப்பை தொடரில் சேப்பாக்கம் ஆடு​களம்​ மட்​டுமே ரன்​கள்​ குவிப்​புக்​கு பாதகம்​ இல்​லாமல்​ இருந்​து வருகிறது. இதை இந்​திய வீரர்கள்​ பயன்​படுத்திக் கொள்ளக்கூடும்

Spread the love