March 5, 2026

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.8.50 கோடியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

ஆண்டிபட்டி, மார்ச். 05, 

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை  செயலகத்திலிருந்து நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இச்சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்  முன்னிலையில் குத்துவிளக்கேற்றி புதிய ஸ்கேன் கருவியின் செயல்பாடுகளைப் பார்வையிட்டார். 

புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேன்  மூலம் வழக்கமான பரிசோதனைகளுடன், இதயம் தொடர்பான எம்.ஆர்.ஐ., எம்.ஆர்.ஆஞ்சியோகிராபி, நரம்பியல் பாதிப்புகள் மற்றும் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உயர்தரப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, கதிர்வீச்சு பாதிப்பு இல்லாத பாதுகாப்பான முறையில் விபத்து மற்றும் அவசர கால நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்க இது வழிவகை செய்யும்.மேலும் பக்கவாத நோய் கண்டறியபட்டு முழுவதுமான சிகிச்சை அளிக்க முடியும்.

மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மேம்பட்ட பயிற்சிகளைப் பெறவும், ஆராய்ச்சித் திறனை வளர்த்துக்கொள்ளவும் இக்கருவி பெரும் உதவியாக இருக்கும், இதன் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒரு முழுமையான மூன்றாம் நிலை சிகிச்சை மையமாக வலுப்பெற்றுள்ளது. 

இந்நிகழ்வில் மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துசித்ரா, துணை முதல்வர் கவிதா, மருத்துவ கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த், உறைவிட மருத்துவ அலுவலர் சிவக்குமரன் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Spread the love