March 20, 2026

தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்!

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி பற்றி…

அமித் ஷா – இபிஎஸ் (கோப்புப்படம்)

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் இருக்கும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் வேகமாக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து வரும் சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில், இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருக்கின்றன.

பாஜகவுக்கு 29 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக, பாஜக இரு கட்சிகளும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.Advertise with us

பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்த பயணத்தின் போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பியூஷ் கோயலின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து இபிஎஸ் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பிறகு நாளை தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love