
புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவையில் நேற்று, அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நேற்று நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா குறுக்கிட்டு, “புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை.
‘இரட்டை இன்ஜின்’ அரசு என்று கூறினீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீர்கள். வளர்ச்சிக்கான திட்டங்களான மேம்பால பணியை தொடங்கவில்லை.
விமான நிலைய விரிவாக்கம் செய்யவில்லை. ‘மாநில அந்தஸ்துக்காக டெல்லிக்கு அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களை அழைத்துச் செல்வோம்’ என கூறினீர்கள். ஆனால் செய்யவில்லை. உங்களை நம்பி மக்கள் வாக்களித்தனர்.
தற்போதுள்ள சூழலில், மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்கத் தயாரா?” என்று கேட்டார். அப்போது முதல்வர் ரங்கசாமி குறுக்கிட்டு, “தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக உள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அதற்கு தயார்தான்..! நீங்கள் உறுதியாக தயாரா..? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம்” என்றார்.
தொடர்ந்து கூட்டத்தின் இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசும்போது, “ஒட்டு மொத்தமாக பேசி முடிவெடுத்து தேர்தலைப் புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி முடிவு செய்யுங்கள். மாநில அந்தஸ்துக்குப் பிறகு, நாம் தேர்தலை சந்திக்கலாம்” என்று தெரிவித்தார்.
ஆளுநருக்கே அதிகாரம்: பல ஆளுநர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. தனக்குத்தான் (ஆளுநருக்குத்தான்) அதிகாரம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அதிகாரம் தேவை என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளையும், சட்டப்பேரவையில் அளித்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.
மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து இந்த அரசு செயல்பட்டுள்ளது. நிர்வாகத்தில் சில சங்கடங்கள் தொடர்கின்றன. அந்த சங்கடங்கள் தீர மாநில அந்தஸ்து அவசியம் வேண்டும். இதை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். 1991-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவையில் உள்ளேன். தொடர்ந்து பல ஆளுநர்களைப் பார்த்துள்ளேன். ஆனால், தற்போது நிலை மாறியுள்ளது.
தனக்குத்தான் (ஆளு நருக்குத்தான்) அதிகாரம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அதிகாரம் தேவை. இதனாலேயே மாநில அந்தஸ்தை தருமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு, மாநில அந்தஸ்து வழங்கும் என நம்புகிறோம்.
அரசு சார் நிறுவனங்கள்: புதுவையில் இயங்கி வந்த சுதேசி, பாரதி, ஏஎப்டி, கூட்டுறவு நுாற்பாலைகள் எத்தகைய நிலையால் மூடப்பட்டது என அனைவருக்கும் தெரியும். இருப்பினும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறோம். அவர்களுக்கு பணிக் கொடையும் வழங்கப்படுகிறது.
பாசிக், பாப்ஸ்கோ உட்பட அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கியுள்ளோம். இந்த நிறுவனங்களை தொடர்ந்து நடத்த பல்வேறு முயற்சிகளும் எடுத்தோம். ஆனால் அங்குள்ள தொழிலாளர்களுக்கு பணி செய்யும் எண்ணம் இல்லை. இருப்பினும் அங்கு வேறு வகையிலான ஐடி உள்ளிட்ட தொழிற்சாலைகளை கொண்டு வர முடியுமா என ஆலோசித்து வருகிறோம்.
படித்த இளைஞர்கள் சுமார் 4 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்கியுள்ளோம். இந்தப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தது. உள்கட்டமைப்பு பணிகளை ரூ.3 ஆயிரம் கோடியில் செய்துள்ளோம். இன்னும் பல பணிகளுக்கு பூஜை போடப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சி, ஆளும் கட்சி தொகுதி என எதிலும் பாரபட்சம் காட்டவில்லை. ஒட்டு மொத்த மாநில வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளோம். வரும் மே மாதத்தில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கும். விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளோம்; நிலமும் தேர்வு செய்துள்ளோம். தொடர்ந்து மத்திய அரசை கூடுதல் நிதி கேட்டு அணுகி வருகிறோம். புதுவை விளையாட்டு மேம்பாட்டுக்கு ரூ.200 கோடி நிதியை மத்திய அரசு தருகிறது.
பிரதமர் வரும் போது.. புதுவைக்கு பிரதமர் வரும் போது புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். புதுவை போல நலத்திட்டங்களை செய்யக்கூடிய பிற மாநிலங்களே இல்லை. கல்வி நிதி உதவியாக ரூ.27 கோடி வழங்கியுள்ளோம். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உள்ளோம். ரூ.14 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் வர உள்ளது.
தேர்தலில் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால் நல்ல சட்டமன்றம் தொடர்ந்து இயங்க வேண்டும். தனிப்பட்ட நபர்களுக்காக சபையில் பேசக்கூடாது. தொழிலதிபர்கள் தங்கள் தொழிலுக்காக சிலவற்றை சொல்வார்கள். அதற்காக மதுபான கடைகளை மூட வேண்டும் என பேச முடியாது. எதுவாக இருந்தாலும், சட்டப்பேரவையில் விவாதம் நடத்திதான் முடிவெடுக்க வேண்டும்.
‘தொழிற்சாலைகள் வரவில்லை’ என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. சேதராப்பட்டில் 750 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைய உள்ளது. இதற்காக விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.
அதேபோல் புதுச்சேரியில் மஞ்சள் ரேஷன்அட்டை வைத்துள்ள மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மேலும் 4 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை விரைவில் தரவுள்ளோம். ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்த பள்ளி மாணவர்களுக்கான மடிக் கணினிகள் இன்று முதல் வழங்கப்படும் என்று தெரிவித் தார்.

More Stories
பெங்களூரில் கொடூர விபத்து! வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் 7 பேர் பலி
புதுச்சேரியில் ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்
சென்னை ஆராய்ச்சி மையத்தை ரூ.196 கோடியில் விரிவாக்கம் செய்கிறது மஹிந்திரா நிறுவனம்