
புதுடெல்லி: மத்திய உள்துறை சார்பில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கையில் கூறியிருப்பதாவது: சில அண்டை நாடுகள் தீவிரவாதத்தை நாட்டின் கொள்கையாக கடைப்பிடித்து வருகின்றன. இதனால் இந்தியா பாதிக்கப்படுகிறது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரஹார் (PRAHAAR) என்ற தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை வெளியிடப்படுகிறது.
இதன்படி தீவிரவாத தாக்குதல்களை முன்கூட்டியே தடுத்து இந்திய மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாத தாக்குதல்களின்போது அதிவிரைவாக பதிலடி கொடுக்கப்படும். தீவிரவாதத்துக்கு எதிராக அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும். தீவிரவாத அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள், சட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தீவிரவாதம் வேரறுக்கப்படும். தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகளுடன் இந்தியா ஒன்றிணைந்து செயல்படும். தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் விரைந்து மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அல்-காய்தா, ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களால் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நீடிக்கிறது.
இந்த குழுக்களை சேர்ந்த தீவிரவாதிகள் அந்நிய மண்ணில் பதுங்கியிருந்து இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபடுகின்றனர். இதற்கு சில அண்டை நாடுகளும் துணைபோகின்றன. தீவிரவாதிகளுக்கு அண்டை நாடுகளில் இருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
‘காந்தாரா’ மிமிக்ரி சர்ச்சை: நடிகர் ரன்வீர் சிங்குக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டிப்பு
‘‘சமூகத்தை ஒன்றிணைக்க பொது சிவில் சட்டம் அவசியம்’’: மோகன் பாகவத்
ஹரியானா அரசு கணக்கில் ரூ.590 கோடி மோசடி – ஐடிஎப்சி வங்கி ஊழியர்களின் பணப் பரிமாற்றம் குறித்து ஆய்வு