புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து 2 மாதங்களுக்கு முன் விலகியவர் ஷகீல் அகமது. இவர், பிஹார் காங்கிரஸாரிடையே முக்கியமாக இருந்த முஸ்லிம் தேசியத் தலைவர்.
நேற்று முன்தினம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பகிரங்கமாக விமர்சித்திருந்தார் ஷகீல். இவர் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று கூறியது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மாநிலங்களவை முன்னாள் எம்பி ஷகீல் அகமது கூறும்போது, ”முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து வருகின்றனர். காங்கிரஸும் முஸ்லிம்களின் வாக்குகளை விரும்புகிறது. பாஜகவும் முஸ்லிம்கள் தமக்கு வாக்குகளிக்க வேண்டும் என விரும்புகிறது, ஆனால், பாஜக தலைவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
ஒரு கட்சி யாருக்காவது ஆதரவாகப் பேசினால் இது, வாக்குகளைப் பெறுவதற்காகவே என்று மக்கள் கருதுகின்றனர். அவர்களை ஏமாற்றுவதற்காகவே அப்படிச் சொல்லப்படுகிறது என்று கூட சிலர் கருதக்கூடும்” என்றார்.
முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாகப் புகார் கூறிய ஷகீல், முஸ்லிம் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமை தயக்கம் காட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த புகாருக்கு பின் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் ஷகீல் அகமது புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸின் மூத்த தலைவர்களில் முக்கியமானவரும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான ராஷீத் ஆல்வி கூறும்போது, ‘முஸ்லிம் தலைவர்களுடனானப் பேச்சுவார்த்தைக்காக ஒரு பயனுள்ள தளம் இல்லை. முஸ்லிம் தலைவர்களைச் சந்திக்க ராகுல் காந்திக்கு நேரம் இல்லை. ராகுலைச் சந்திப்பது எளிதல்ல. இதுபோன்ற காரணங்களால் முஸ்லிம் தலைவர்கள் பல காலமாக கட்சியிலிருந்து விலகியிருப்பது கவலை தருகிறது. இந்த முஸ்லிம் தலைவர்கள் அதிகாரத்துக்காக கட்சியை விட்டு வெளியேறவில்லை. முஸ்லிம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்ந்தால், அசாதுதீன் ஒவைசி போன்ற தலைவர்கள் தொடர்ந்து உருவாகி விடுவார்கள்’ என்றார்.
தீர்வு காண வேண்டும்: இவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், பிஹாரின் கட்டிஹார் மக்களவை எம்பியும் காங்கிரஸின் மற்றொரு முக்கிய முஸ்லிம் தலைவருமான தாரிக் அன்வர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சிக்குள் அப்படிப்பட்ட அதிருப்தி இருக்குமானால், அது ஏன் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, அதற்கு முறையாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஒரு தேசியக் கட்சி, அந்தக் கட்சி வலுவாக இருப்பதும், தன்னை மேம்படுத்திக் கொள்வதும், எதிர்காலத்தில் நாட்டை பாதுகாக்கப் பாடுபடுவதும் ஜனநாயகத்துக்கு மிகவும் அவசியம். முஸ்லிம் தலைவர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால், அது குறித்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நேரில் விவாதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் 2027-ல் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸ் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இம்மாநிலத்தில் அதிகமாக உள்ள முஸ்லிம்களின் வாக்குகள் காங்கிரஸின் முக்கியக் குறியாக உள்ளது. இச்சூழலில் காங்கிரஸுக்கு எதிராக அதன் முஸ்லிம் தலைவர்கள் விமர்சனம் செய்வது, கட்சி தலைமைக்கு பிரச்சினையாகி விட்டது. உ.பி.யின் முக்கிய முஸ்லிம் தலைவரான நசீமுத்தீன் சித்திக்கீயும் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

More Stories
ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பியுள்ளது திமுக: நயினார் நாகேந்திரன்
‘‘சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’’ – செல்வப்பெருந்தகை
விருதுநகரில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி – முக்கிய அறிவிப்பு காத்திருக்கிறது என தங்கம் தென்னரசு பேட்டி