April 2, 2026

வெளியானது பாமக தேர்தல் அறிக்கை… அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் என்னென்ன இருக்கிறது தெரியுமா?

பாமக தலைவர் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாமக தனது தேர்தல் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையை வெளியிட்டார்.

இந்த தேர்தல் அறிக்கையில் மொத்தம் 45 தலைப்புகளின் கீழ் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், விவசாயம், சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய வகையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Anbumani யை சீண்டிய ரவீந்திரன் துரைசாமி!
மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்கும் நோக்கில், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள்

  • 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
  • 2026–27 மற்றும் 2027–28 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட நான்காம் தொகுதி பணிகளுக்கு 35,000 பேர் தேர்வு செய்யப்படுவர்.
  • இரண்டாம் தொகுதி பணிகளுக்கு 10,000 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கவும், காலியிடங்களை நிரப்பவும் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். முதற்கட்டமாக 2025–26ஆம் ஆண்டில் 40,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
  • காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை உள்ளிட்ட சீருடைப் பணிகளுக்கு 20,000 பேர் தேர்வு செய்யப்படுவர்.
  • போக்குவரத்து துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப 10,000 பேர் நியமனம் செய்யப்படுவர்.
  • மின்சார வாரியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், முதற்கட்டமாக 16,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4,000 மருத்துவர்கள், 3,000 மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 7,000 பேர் நியமிக்கப்படுவர்.
  • தமிழக அரசால் தொடங்கப்படவுள்ள 30,000 காவிரி பொருள் அங்காடிகளில் பணியாற்ற ஒரு லட்சம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  • வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் வாரியத்திற்கு 12,000 பேர் தேர்வு செய்யப்படுவர்.
  • ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் துறையில் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
  • பட்டப்படிப்பை முடித்து வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 வீதம் நிதி உதவி வழங்கப்படும்.

என்டிஏ கூட்டணியில் பாமக

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தேர்தலில் பாமக 18 இடங்களில் போட்டியிட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் ஏற்கனவே கையெழுத்தானது.

பாமக போட்டியிடும் முக்கிய தொகுதிகள்

வட தமிழகத்தில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள பாமக-விற்கு, அதன் செல்வாக்கு மிகுந்த பகுதிகளான தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், மயிலம், திண்டிவனம் உள்ளிட்ட 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 18 இடங்களில் போட்டியிட்டாலும், கூட்டணி பலத்துடன் கணிசமான இடங்களைக் கைப்பற்றி சட்டப்பேரவைக்குள் நுழைய பாமக திட்டமிட்டுள்ளது.

Spread the love