March 24, 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கருட கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கல்யாண திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க் கிழமை காலை கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 1-ம் தேதி பங்குனி உத்திரம் அன்று ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

108 வைணவ திருத்தலங்களில் சிறப்புமிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்ததால் முப்புரி ஊட்டிய ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் மகளாக அவதரித்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் கண்ணனை நினைத்து திருப்பாவை பாடி, பாவை நோன்பிருந்தார். அதன் பலனாக பங்குனி உத்திர நாளில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாரை கரம் பிடித்தார் என்பது கோயில் வரலாறு. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருப்பாவை பாடல் பாடப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் நாளில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா இன்று காலை 9 மணிக்கு கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ஆண்டாள் ரெங்கமன்னார் திவ்ய தம்பதியினர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருள கருட கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

13 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் தினசரி இரவு பல்வேறு வாகனங்களில் ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இதில் 5-ம் நாள் விழாவான மார்ச் 28-ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது. 9-ம் நாள் விழாவான ஏப்ரல் 1-ம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை 7.05 மணிக்கு செப்புத் தெரோட்டமும், இரவு 7 முதல் 8 மணிக்குள் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. திருக்கல்யாண திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Spread the love