February 17, 2026

ஹரியானாவில் 5 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு: அசுத்தமான குடிநீர் காரணமா?

ஹரியானாவில் 5 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு: அசுத்தமான குடிநீர் காரணமா?

பல்வால்: ஹரியானாவின் பல்வாலில் உள்ள சாயன்சாவில் கடந்த 15 நாட்களில் ஐந்து குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இது அசுத்தமான குடிநீர் மற்றும் தொற்று நோய் பரவல் காரணமாக ஏற்பட்டதா என சுகாதாரத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

சயான்சாவில் ஜனவரி கடைசியிலிருந்து பிப்ரவரி நடுப்பகுதி வரையில் ஏற்பட்ட 12 உயிரிழப்புகள் கடுமையான கல்லீரல் சிக்கல்களுடன் தொடர்புடையவை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வைரஸ் ஹெபடைடிஸ் மற்றும் நீர் மாசுபாடு காரணம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவித்தன.

865 வீடுகளைக் கொண்ட சாயன்சா கிராமத்தில் 5,700 பேர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் ஜனவரி 31 அன்று மஞ்சள் காமாலை தொடர்பான உயிரிழப்புகள் முதன் முதலில் பதிவாகியது. இதனையடுத்து கிராமத்தில் தொடர்ச்சியான மருத்துவ முகாம்கள், வீடு வீடாக கணக்கெடுப்புகள் மற்றும் மக்களிடம் மருத்துவ பரிசோதனை ஆகியவை தொடர்ந்து நடத்தப்பட்டன.

ஜனவரி 27 மற்றும் பிப்ரவரி 11-க்கு இடையில் சாயன்சாவில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் நான்கு பேர் கடுமையான ஹெபடைடிஸ், கல்லீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஒன்பது முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள். அதன் பின்னர் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி மற்றும் மஞ்சள் காமாலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக புகாரளித்தனர்.

பல்வால் தலைமை மருத்துவ அதிகாரி சதீந்தர் வசிஷ்த் கூறுகையில், “இந்த உயிரிழப்புகள் குறித்து விரிவான பரிசோதனை நடந்து வருகிறது. இதுவரை, இறந்தவரின் நெருங்கிய தொடர்புகள் உட்பட சுமார் 1,500 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஹெபடைடிஸ் ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டன. 210 பேரின் ரத்த பகுப்பாய்வில் இரண்டு பேருக்கு ஹெபடைடிஸ் பி மற்றும் ஒன்பது பேருக்கு ஹெபடைடிஸ் சி இருப்பது கண்டறியப்பட்டது.

இதுவரை சேகரிக்கப்பட்ட 107 வீட்டு நீர் மாதிரிகளில், 23 தர சோதனைகளில் பாக்டீரியா மாசுபாடு மற்றும் போதுமான குளோரினேஷன் இல்லாதது கண்டறியப்பட்டது. மற்றொரு சோதனையில் நீர் சேமிப்பு தொட்டிகளில் கோலிஃபார்ம் பாக்டீரியா கண்டறியப்பட்டது” என்றார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கடந்த மாதம் அசுத்தமான நீரால் 16 பேர் உயிரிழந்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.

Spread the love