சென்னை: அரசு துறைகளில் அதிக காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி அனைத்துப் போட்டித் தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், அரசு துறை பணி நியமனங்கள் எந்த வகையில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இடையே எழுந்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: அரசுத் துறைகளில் அதிக எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களை நிரப்ப மனித வளத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புவது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-யிடமும் ஆலோசனை நடத்தி இருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி-யின் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் திட்டமிட்டபடி வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்.
அந்த வகையில் முதல் அறிவிப்பாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) கடந்த மே 20-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
புதிய பணியிடங்கள் வரும்பட்சத்தில் பிற்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும். அதேபோல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இதேமுறையில் சேர்த்துக்கொள்ளலாம்.
குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும். என்னென்ன பதவிகள் மற்றும் காலியிடங்கள் தொடர்பான விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறும். இதேபோல், அனைத்துத் தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டு தேர்வு முடிவுகளும் விரைவாக வெளியிடப்படும்.
கடந்த ஆண்டு, முதல்முறையாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டன.
இந்த ஆண்டு பல்வேறு அரசு பல்கலைக்கழகங்களிடமிருந்து ஆசிரியர் அல்லாத பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் வந்த வண்ணம் உள்ளன. பதவி நிலைக்கு ஏற்ப அந்த பணியிடங்கள் ஒருங்கிணைந்த குரூப்-2 தேர்விலோ அல்லது குரூப்-2ஏ தேர்விலோ சேர்க்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் விரைவில் 15 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த காலிப்பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி வாயிலாக படிப்படியாக நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
பழநி பஞ்சாமிர்தம் மீண்டும் சட்டவிரோத விற்பனை: ஆன்லைனில் அதிக விலையால் பக்தர்கள் அதிர்ச்சி
நிதி ஆயோக், என்டிஏ கூட்டங்கள் புறக்கணிப்பு: டெல்லி செல்லாத புதுவை முதல்வர் ரங்கசாமி
“சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என முழங்கியவர்” – பாரதிராஜாவுக்கு திருமாவளவன் புகழஞ்சலி