மனந்தவாடி (கேரளா): பாஜகவும் – ஆர்எஸ்எஸ் அமைப்பும் தனது தாய் சோனியா காந்தி பற்றி அவதூறு பரப்பி வந்ததாகவும், தற்போது அவர் தனது புத்தகத்தின் மூலம் உண்மை என்ன என்பதை தெளிவுபடுத்தி இருப்பதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான பிரியங்கா காந்தி, கேரளாவின் மனந்தவாடியைச் சேர்ந்த பத்ம ஸ்ரீ விருது பெற்ற மறைந்த இயற்கை விவசாயி செருவயல் ராமனின் இல்லத்துக்கு வருகை தந்தார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “செருவயல் ராமன் எனது நண்பர். அவர் மிகவும் நல்ல மனிதர். அவர் ஒரு தனித்துவமான ஆன்மா.
அவரை நான் எனது நண்பராகவே கருதுகிறேன். தனது மக்களுக்காக உண்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வாழ்ந்த மனிதர். அவர் குறித்த இந்த நினைவு ஒருபோதும் நீங்காது,” என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றிய செருவயல் ராமன், நிலையான விவசாயம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்கான அவரது பங்களிப்புக்காக பத்ம ஸ்ரீ வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
சோனியா காந்தியின் வாழ்க்கை குறித்து விவரிக்கும் புத்தகம் ஏற்படுத்தி வரும் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “எனது தாயாரின் திருமணத்துக்குப் பிறகு, அவரது வாழ்க்கை குறித்து பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மற்றவர்களும் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் பேசி வந்தனர். அவர்கள் பொய்களைக் கூறினர். கதைகளைக் கட்டமைத்தனர். இல்லாத கதைகளை உருவாக்கினர். ஆனால், என் தாயார் அமைதியாகவே இருந்தார்.
இப்போது அவர் தனது கதையைச் சொல்கிறார். அதைச் சொல்வதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. அவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தயாராக இருப்பது நல்ல விஷயம். இத்தனைக் காலம் அவர்கள் என் தாயைப் பற்றி பொய்களைப் பரப்பி வந்தனர். இப்போது அவர் உண்மையைச் சொல்கிறார். அவர்கள் அவரது புத்தகத்தைப் படிப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசை கடுமையாக விமர்சித்த பிரியங்கா காந்தி, “தாங்கள் மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த (மத்திய அரசு) அரசாங்கம் கருதுகிறது. தாங்கள் விரும்புவதைச் செய்யலாம் என்றும், மக்கள் எந்த கேள்வியையும் கேட்க மாட்டார்கள் என்றும் அது நினைக்கிறது.
மக்கள் குறிப்பாக இளைஞர்கள், கேள்விகளைக் கேட்டு, பதில்களைக் கோரும்போது அவர்களைத் தாக்கியும் சிறையில் அடைத்தும், போராட்டங்களைத் தடுத்தும் ஒடுக்க அரசாங்கம் முனைகிறது. இது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகத்தில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம். விலைவாசி உயர்ந்தால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், வேறு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும், அது மக்களுக்குப் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகம். நமது அரசியலமைப்பும் இதையேதான் கூறுகிறது.
ஜனநாயக நாட்டில் போராடுவதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. இந்த உரிமையை அரசியலமைப்பு வழங்கி இருக்கிறது. மக்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டால் காவல்துறை நிச்சயம் தலையிட வேண்டும்தான். ஏனெனில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
அதேநேரத்தில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெறும்போது அவற்றை அனுமதிக்க வேண்டும். கேரளாவில் உள்ள எங்கள் அரசாங்கங்களுக்கு எதிரானதாக இருந்தாலும் சரி, எங்கள் கொள்கைகளுக்கு எதிரானதாக இருந்தாலும் சரி அவை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.” என தெரிவித்தார்.

More Stories
ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 2 காவலர்கள் சடலமாக மீட்பு
ஆந்திராவில் காங்கிரஸுக்கு ஒரு கவுன்சிலர்கூட இல்லை
மக்களே. பர்ஸை பத்திரமா பாத்துக்கோங்க!