சென்னை: சென்னையில் இன்று (வியாழக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13,000-க்கும் கீழ் குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2 நாட்களில் மட்டும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ₹3,000-க்கும் மேல் குறைந்திருப்பது நகை வாங்க முடியாமல் தவித்த நடுத்தர மக்களுக்கு சிறிய ஆறுதலைத் தந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.160 என்றும், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.760 என்றும் உயர்ந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று பவுனுக்கு ரூ.360 குறைந்தது, புதன் கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது.
இன்றைய விலை விவரம்
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,815-க்கும், பவுனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.₹1,02,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.218 குறைந்து, ஒரு பவுன் 1,11,840-க்கு விற்பனை ஆகிறது.
18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு பவுன் ரூ.83,920-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,00,000-க்கும் விற்பனை ஆகிறது.
விலை குறையக் காரணம் என்ன?
தங்கம் விலை தொடர்ந்து குறைய ஐந்து காரணங்களை சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது, அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களுக்கு வட்டி அதிகரித்துள்ளதால், வட்டி தராத தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்துள்ளது, தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்திற்காக தங்கத்தை விற்பனை செய்வது, சர்வதேச பதற்றம் தணிந்ததை அடுத்து, பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது ஆகியவற்றை தங்கம் விலை குறைவதற்கான காரணங்களாக சந்தை வல்லுநர்கள் பட்டியலிடுகின்றனர்.

More Stories
பங்குச் சந்தையில் தொடரும் எழுச்சி – சென்செக்ஸ் 1,000+ புள்ளிகள் உயர்வு!
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைவு
லக்னோ: ‘தன்தேரஸ்’ பண்டிகைக்கு ரூ.67 கோடி தங்கம், ரூ.20 கோடி வெள்ளி விற்பனை