July 6, 2026

இந்தியாவில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை: நீரில் முழ்கிய மும்பை.. 3 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் – விவரம் இதோ

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை காரணமாக மும்பையில் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மேலும் கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தலைநகர் டெல்லியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பல பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையைத் தொடர்ந்து நீட்டித்துள்ளதுடன், ஆங்காங்கே அதிதீவிரக் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

மும்பையில் கொட்டித்தீர்த்த 300 மி.மீ கனமழை

இந்த பருவமழையால் மும்பை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளச் செயல்பாடுகள் சுமார் ஒரு மணி நேரம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டதால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகள் கணிசமாகப் பாதிக்கப்பட்டின.

மும்பையில் விமானச் சேவைகள் முடக்கம்

இதனால், விமானங்கள் புறப்படுவதில் சராசரியாக 75 நிமிடங்களும், வந்து சேருவதில் 28 நிமிடங்களும் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காலை 10:17 மணி அளவில், மணிக்கு 42 நாட்ஸ் வேகத்தில் வீசிய பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கனமழையால் ஏற்பட்ட குறைவான பார்வைத்திறன் காரணமாக ஓடுதளச் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 42 நாட்ஸ் வேகத்தில் வீசிய சூறாவளி காற்று

குறிப்பாக மணிக்கு 42 நாட்ஸ் வேகத்தில் வீசிய சூறாவளி காற்று வீசியது . பின்னர், வானிலை சீரானதைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் கழித்து ஓடுதளம் மீண்டும் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மும்பையின் பல பகுதிகளில் 200 மி.மீ முதல் 300 மி.மீ வரை மிகக் கடுமையான மழை பதிவாகியுள்ளது.

ஒடிசாவில் தீவிரமடையும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் நிலவிய வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒடிசா அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் அதிதீவிர உஷார் நிலையில் (High alert) இருக்க உத்தரவிட்டுள்ளது

கேரளாவில் நிலச்சரிவு, திடீர் வெள்ள அபாயம் அலெர்ட்

இந்தத் தாழ்வு மண்டலம் சன்த் பாலி மற்றும் திகா ஆகிய பகுதிகளுக்கு இடையே வடக்கு ஒடிசா கடற்கரையைக் கடக்கக்கூடும் என்பதால், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதே போல் கேரளாவிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கனமழையால் நிலச்சரிவு, திடீர் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கேரளா மக்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love