November 24, 2026

இராசிபுரம்:போதமலை உச்சியில் செவ்வாய்க்கிழமை மகா தீபம் ஏற்ற ஏற்பாடு! கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்து மலைக்கு அனுப்பி வைப்பு!

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம், வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் போதமலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

இதற்காக மகா தீபம் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய கொப்பரைக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டன.

 தொடர்ந்து, பக்தர்களின் பக்தி முழக்கங்களுக்கு இடையே கொப்பரை போதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, இன்று பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து, நந்தி பகவானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, மலர் அலங்காரத்துடன் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மேலும், கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

Spread the love