
Follow Us
புதுடெல்லி: எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை இனி இந்தியா உளவு பார்க்க முடியும் என்ற நிலையை அடைந்துள்ளது. விண்வெளியில் 50-க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) நிர்வகித்து வருகிறது. இந்த செயற்கைக் கோள்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தைச் சேர்ந்த அசிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ஒரு செயற்கைக் கோளில் இருந்து மற்றொரு பொருளைப் புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தை (நான்-எர்த் இமேஜிங்) செய்து காட்டியுள்ளது.
கடந்த 3ம் தேதி நடைபெற்ற இந்தச் சோதனையில், அசிஸ்டா நிறுவனத்தின் 80 கிலோ எடை கொண்ட ஏஎப்ஆர் செயற்கைக்கோள், விண்வெளியில் அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் நிறுவியுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை (ஐஎஸ்எஸ்) மிகத் துல்லியமாகப் புகைப்படம் எடுத்துள்ளது.
இது விண்வெளியில் உள்ள மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் அல்லது ‘உளவு பார்க்கும்’ (இன்-ஆர்பிட் ஸ்னூப்பிங் – In-Orbit Snooping) இந்தியாவின் திறனை ஒரு புதிய உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. இந்தச் சோதனை விண்வெளியில் மிகச் சவாலான சூழலில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. சுமார் 300 கிலோ மீட்டர் மற்றும் 245 கிலோ மீட்டர் தொலைவுகளில் இருந்து அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஏஎப்ஆர் செயற்கைக்கோள் பின் தொடர்ந்து துல்லியமாக புகைப்படங்களை எடுத்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் விண்வெளியில் மற்ற நாடுகள் அனுப்பும் செயற்கைக்கோள்கள் எங்கெங்கு செல்கின்றன, உளவு பார்க்கின்றனவா என்பதைக் கண்காணிக்க உதவும். இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம், எதிரி நாடுகள் ஏவும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உளவு பார்த்து ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியலாம். இஸ்ரோ ஏற்கெனவே இத்தகைய சோதனைகளைச் செய்திருந்தாலும், ஒரு தனியார் நிறுவனம் இந்த நிலையை எட்டியிருப்பது இந்தியாவின் விண்வெளித் துறை வணிகமயமாவதை உறுதிப்படுத்துகிறது.
இதுகுறித்து அசிஸ்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி கூறும்போது, “முன்னேறிய புகைப்படங்கள் எடுக்கும் திறனையும், ரிமோட்-சென்சிங் தீர்வுகளையும் ஏஎப்ஆர் செயற்கைக் கோள் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. தற்போது நான்-எர்த் இமேஜிங் புகைப்படத்தை எடுத்து சாதனை படைத்துள்ளது” என்றார்.

More Stories
கான்பூர்: தொழிலதிபரின் மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி விபத்து – 6 பேர் காயம்
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை இன்றும் முடக்கம்!
“லண்டனை விட சிறப்பு… டெல்லி மெட்ரோவில் டிக்கெட் விலை குறைவு” – பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி பாராட்டு