புது டெல்லி: என்சிஇஆர்டியின் 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
9-ஆம் வகுப்புக்கான ‘சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்’ என்ற சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், இந்தியாவில் 1975-ல் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் குறித்த தகவல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் பலங்கள் மற்றும் சவால்களை ஆராயும் பாடத்தில், அவசரநிலை பிரகடனமானது “இந்திய ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட முக்கிய சவால்களில் ஒன்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை, அவசரநிலை குறித்த பாடங்கள் 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திலேயே இருந்தது. சமீபத்திய திருத்தத்தின் மூலம், 9-ஆம் வகுப்பு மாணவர்களும் அவசரநிலைக் காலத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இந்தப் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
என்சிஇஆர்டியின் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில், “1975-77 காலகட்டத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஒரு முக்கிய சவால் ஏற்பட்டது. 1970-களின் தொடக்கத்தில், இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து வந்தது. வேலையின்மை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாகச் சீர்கேடு குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவை பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்தன.
இதனைத் தொடர்ந்து ஜூன் 1975-ல், உள்நாட்டு அமைதியின்மை என்ற அடிப்படையில் அரசாங்கத்தால் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இக்காலகட்டத்தில், பெரும்பாலான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன, ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன, ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஜனநாயக அமைப்புகள் கடுமையான நெருக்கடிக்குள்ளாயின மற்றும் மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது.
அரசியல் தலைவரும், சோசலிச சிந்தனையாளருமான ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான மக்கள் இயக்கங்கள், பிஹார் மற்றும் குஜராத்தில் மாணவர்களையும், மக்களையும் ஒன்றிணைத்தன. 1977-ல் அவசரநிலை விலக்கிக்கொள்ளப்பட்டு பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன; இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பத்தை வாக்குச்சீட்டு வாயிலாக வெளிப்படுத்த முடிந்தது. இதில் ஆளும் அரசாங்கம் தோல்வியடைந்தது. இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை வெளிப்படுத்தியதுடன், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More Stories
மேல்நிலை துணை தேர்வுகள்: தனித் தேர்வர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் வெளியீடு
கல்வி உதவித்தொகை வழங்குவதாக வாட்ஸ்அப் வாயிலாக மோசடி அழைப்புகள்: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை
அரசு பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பிற்கு ஸ்பெஷல் பிளான்: அமைச்சர் ராஜ்மோகன் சார்ட்டிங் ஐடியா