புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 10% பேர் மட்டுமே பெண்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்க (ஏடிஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ‘இந்திய அரசியலில் பெண்களின் பங்கு மற்றும் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள மொத்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 4,666 ஆக உள்ளது. இதில் 10% (464) பேர் மட்டுமே பெண்கள்.
நாடாளுமன்ற (18-வது) மக்களவையில் உள்ள 543 எம்.பி.க்களில் 74 பேர் (14%) மட்டுமே பெண்கள். நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் 22-ல் மட்டுமே பெண்கள் எம்.பி.க்களாக உள்ளனர். பெண் எம்.பி.க்கள் இல்லாத மாநிலங்களில் கேரளாவும் இடம்பெற்றிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் அதிக அளவாக 11, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் தலா 7, மத்திய பிரதேசத்தில் 6 பெண்கள் எம்.பி.க்களாக உள்ளனர். கட்சிகளைப் பொருத்தவரை பாஜக 31 பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் (13), திரிணமூல் காங்கிரஸ் (11) அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகளில் 4,123 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 390 (9%) மட்டுமே பெண்கள். உத்தர பிரதேசத்தில் அதிக அளவாக 47 பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேற்கு வங்கத்தில் 40, பிஹாரில் 29, மத்திய பிரதேசத்தில் 27 பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கட்சிகளைப் பொருத்தவரை 163 பெண்களுடன் பாஜக முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் (59), திரிணமூல் காங்கிரஸ் (34) அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
கடந்த சில பத்தாண்டுகளாக தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 1957 மக்களவைத் தேர்தலில் 45 பெண்களே போட்டியிட்டனர். இது கடைசியாக நடந்த 2024 தேர்தலில் 800 ஆக அதிகரித்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
5 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் குற்ற செய்திகளால் பொதுமக்கள் அச்சம்: எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு
தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் – வேகமெடுக்கும் கரூர் நெரிசல் வழக்கு
‘எங்கள் கூட்டணிக்கு வந்தால் தகுதியான இடங்களை வழங்குவோம்’ – விடாமல் விஜய்க்கு வலைவீசும் பாஜக