கொழும்பு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாட இருந்தது. இந்த சூழலில் மேற்காசிய போர் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடரை ரத்து செய்தது இலங்கை கிரிக்கெட்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானம் மூலம் செல்வதில் உள்ள சிக்கல் மற்றும் மேற்காசிய போர் காரணமாக இந்த தொடரை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வரும் 13, 15, 17 ஆகிய தேதிகளில் டி20 தொடரிலும், துபாயில் 20, 22, 25 ஆகிய தேதிகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இருந்தது. இந்த தொடரை ஆப்கானிஸ்தான் நடத்த இருந்தது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தான் நடத்தும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் திட்டமிடப்படுவது வழக்கம். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே நடைபெற இருந்த முதல் இருதரப்பு தொடராக இது அறியப்பட்டது.
மேற்காசிய போர்: கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதலாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மற்றும் இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு சர்வதேச அளவில் உருவாகி உள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளில் விமான போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. இந்தப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தொடரை இலங்கை அணி ரத்து செய்துள்ளது.
இலங்கை அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்: இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகிய நிலையில் இதை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார் கேரி கிர்ஸ்டன்.
அவரது பயிற்சியின் கீழ் 2011-ல் இந்தியா உலகக் கோப்பை பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. வரும் 2027-ல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் வரும் ஏப்.15 முதல் இலங்கை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார்.

More Stories
சிராஜின் மறக்க முடியாத ‘பவுல்டு’ – ஓவலில் இங்கிலாந்தின் இதயம் நொறுங்கிய இந்திய வெற்றி!
CWG 2026: மூட்டுவலியை வென்று பதக்கம் வென்ற சீமா
பாரா தடகளத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் திலீப் மஹது காவிட்