சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தின் நடை மேம்பாலப்பணி காரணமாக, 1 முதல் 5-வது நடைமேடை வரை மூடப்பட்டுள்ளது. சில ரயில்கள் தாம்பரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடியில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரம்மாண்ட நடை மேம்பாலம் அமைக்க முதல்கட்ட பணிகள் பிப்ரவரியில் தொடங்கியது.
இதையடுத்து, விரைவு, மின்சார ரயில் சேவைகள் மாற்றப்பட்டன. தற்போது 2-ம் கட்டமாக, இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக, எழும்பூர் ரயில் நிலையத்தின் 1 முதல் 5-வது நடைமேடை வரை மூடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சில விரைவு ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தில் 1 முதல் 5-வது நடைமேடை வரை 18 மீட்டர் அகலம், 120 மீட்டர் நீளத்துக்கு புதிய இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
அதிலும், 4-வது நடைமேடையில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, தூண்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக, 1 முதல் 5 வரை உள்ள நடைமேடைகளின் ரயில் தண்டவாளங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
எனவே, விரைவு ரயில்கள், 6 முதல் 9-வது வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படுகின்றன. மின்சார ரயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும்.
இப்பணிகள் முடிந்தபிறகு அடுத்தகட்டப்பணி, 6-வது முதல் 8-வது நடைமேடை வரை நடை மேம்பாலத்தின் தூண்கள் மற்றும் தாங்கும் சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளன.
அப்போது, அதற்கேற்ப ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். மின்சார ரயில் சேவையில் மாற்றம்: கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் சில மின்சார ரயில் சேவைகள் ஆக.22 முதல் ஆக.30-ம் தேதிவரை முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட உள்ளன.

More Stories
சுதந்திர தினத்தையொட்டி காவல், தீயணைப்பு துறைகளைச் சேர்ந்த 1,057 பேருக்கு பதக்கங்களை அறிவித்தது ஒன்றிய அரசு
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் முன் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும்: ஐகோர்ட் பதிவுத்துறை அறிவுறுத்தல்
80-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் 30 கோயில்களில் அமைச்சர்கள் பங்கேற்புடன் சிறப்பு வழிபாடு, பொது விருந்து