August 7, 2026

ஓய்வூதியத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி குறைப்பு – முதல்வர் விளக்கமளிக்க தலைமை செயலக சங்கம் வலியுறுத்தல்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதிய கால பலன்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.14 ஆயிரம் கோடி நிதி குறைப்புக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய கால பலன்களுக்கு ஒதுக்கீடானது ரூ.14 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது.

வயது முதிர்வு பணி ஓய்வுக்கால படிகளுக்கு ரூ.1678 கோடி, ஓய்வூதியத்தில் இரு பகுதியை மொத்தமாக்கி கொடுத்தலில் ரூ.180 கோடி, பணிக் கொடைகளுக்கு ரூ.450 கோடி, குடும்ப ஓய்வூதியங்களுக்கு ரூ.275 கோடி, மாநில அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களின் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தில் ரூ.420 கோடி, வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கான அரசின் பங்களிப்பில் ரூ.11 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.14 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், பட்ஜெட்டில் ரூ.14 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது.

இது கடுமையான ஆட்சேபணைக்குரியது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஓய்வூதிய கால பலன்களில் ரூ.14 ஆயிரம் கோடி அளவு குறைக்கப்பட்டிருப்பதற்கான விளக்கத்தை சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே முதல்வர் அறிவிக்க வேண்டும். தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பையும் வெளியிட வேண்டும்.

Spread the love