புதுடெல்லி: நாட்டில் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், “நீங்கள் கூறிய அந்த நல்ல நாட்கள் எங்கே போயின, உங்கள் வாக்குறுதி என்ன ஆனது” என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், ”நாட்டில் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து, நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினரின் முதுகெலும்பை உடைத்துள்ளது.
அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளதால், சாமானிய மக்களின் வாழ்க்கை துயரமானதாக மாறியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், மஞ்சள், மிளகு, கடுகு, கரம் மசாலா போன்ற பொருட்களின் விலை 10% முதல் 25% வரை உயர்ந்துள்ளன. சிறிய ஏலக்காய் விலை கிலோ ரூ. 4,000-ல் இருந்து ரூ.4,400-ஆகவும், பெரிய ஏலக்காய் விலை ரூ. 2,400-லிருந்து ரூ.2,800-ஆகவும் உயர்ந்துள்ளது. சீரகம் ஒரு கிலோ ரூ.360-லிருந்து ரூ.400-ஆக உயர்ந்துள்ளது.
துவரம் பருப்பு விலை ஒரு கிலோ ரூ.100-லிருந்து ரூ.130-ஆகவும், கடலை பருப்பு ரூ.70-லிருந்து ரூ.100-ஆகவும், உளுந்து ரூ.120-லிருந்து ரூ.140-ஆகவும் உயர்ந்துள்ளது. கடுகு எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.190-லிருந்து ரூ.210-ஆக அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில், நாடு முழுவதும் வெங்காயத்தின் சராசரி சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.29.50 ஆக இருந்தது. அது செப்டம்பரில் ரூ.53.78-ஆக உயர்ந்துள்ளது. அதாவது மூன்றரை மாதங்களிலேயே 82.3% என்ற மலைக்க வைக்கும் அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
விலைவாசி உயர்வால், பருப்பு வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி வருகின்றன.
எனினும், விலைவாசி உயர்வு விஷயத்தில் பிரதமர் மவுனம் காக்கிறார். “பிரதமர் அவர்களே, நீங்கள் கூறிய அந்த ‘நல்ல நாட்கள்’ எங்கே போயின? அவை வெறும் பேச்சோடு நின்றுவிட்டனவா?” என்று நாடு கேட்கிறது.
மக்கள் பசியால் வாடுகிறார்கள், ஆனால் அரசாங்கமோ மவுனமாக இருக்கிறது. இதுதானா புதிய இந்தியா?
உங்கள் வாக்குறுதி என்னவானது? அந்த உறுதிமொழி, அந்தத் தீர்மானம் என்னவாயிற்று?
கட்டுக்கடங்காத இந்த விலைவாசி உயர்வுக்கு எதிராக மோடி அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

More Stories
புதுச்சேரியில் ஊதியம், பணி பாதுகாப்பு கோரி போராட்டம்: முடங்கிய பிஆர்டிசி மின்சார பேருந்து சேவை
சென்னையில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 86,489 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
“முதல்வரின் லண்டன் பயணத்தை கிண்டல் செய்வதா?” – அண்ணாமலைக்கு மரிய வில்சன் பதில்