சென்னை: கடந்த ஆண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்நாளில் பட்டாசுகள் வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ளவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018ம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தன.
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018ம் ஆண்டில் இருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
* பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
* மாவட்ட நிர்வாகம்/உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
* அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
* மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
* குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
கேரளாவுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்குமென்றால்…? – தவெகவுக்கு ஸ்டாலின் கேள்வி
பள்ளி மாணவர்களுக்கு நவ.13-ல் கேக்
ஸ்ரீகிருஷ்ணஜென்மபூமி கோயில் காணிக்கையில் தங்கம், வெள்ளியின் தூய்மையை சோதிக்க திட்டம்