சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் உடல் உறுப்பு தானம் வழங்கிய 312 கொடையாளர்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வ தினத்தை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று உடல் உறுப்புகள் தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் காணொலி மூலம் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், புகழ் அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது, 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உடல் உறுப்புகள் தானம் வழங்கிய 312 கொடையாளர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடல் உறுப்புகள் தானம் வழங்கிய 312 கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அணிவித்து கவுரவித்தார். உடல் உறுப்புகள் தானத்தின் போது பசுமை வழித்தடங்களை ஏற்படுத்தி கொடுத்த சென்னை காவல் துறையைப் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் மனோராஜன் கூறுகையில் “தமிழகத்தில் 2008 முதல் 2026 வரை 2,550 உறுப்பு கொடையாளர்களிடமிருந்து 14,845 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
தேசிய அளவில் இதய மாற்று சிகிச்சை, நுரையீரல் மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்திய அரசின் தேசிய விருதினை தமிழகம் பெற்றுள்ளது”என்று தெரிவித்தார்.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு: ஜி.கே.வாசன்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் ரத்து?
சேலத்தில் தவெக கட்சிக் கொடி கலரில் புதிதாக 26 அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்