July 23, 2026

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

இந்தியாவின் தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் கன்னிகையாக வீற்றிருக்கிறாள் பகவதியம்மன். ‘ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது’ என்று பிரம்மதேவரிடம் வரம் பெற்றான் பாணாசூரன்.

இதைத் தொடர்ந்து தேவர்களும், முனிவர்களும் திருமாலைத் தஞ்சமடைந்தனர். திருமாலின் ஆலோசனையின் பேரில் பாணாசூரனை வீழ்த்த, பார்வதி தேவியை நோக்கி தவம் புரிந்தனர்.

அவர்களின் எண்ணப்படி, அன்னை பார்வதி ஒரு கன்னிப் பெண்ணாககுமரிக் கண்டத்தில் அவதரித்தாள். ஈசன் மீதான பக்தியால் அவரையே மணம் புரிய விரும்பி கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் ஒற்றைக்காலில் தவம் மேற்கொண்டாள்.

முதலில் பார்வதி தேவியை மணம் புரிய ஒப்புக்கொண்ட சிவபெருமானால் குறித்த நேரத்தில் அவரை மணம் புரிய வர இயலவில்லை. திருமணக் கோலத்தில் கன்னியாகுமரியில் காத்திருந்த தேவி, ஈசன் வராததால் கோபமடைந்து, திருமணப் பொருட்களை கடலில் வீசினாள்.

மீண்டும் தவத்தில் ஆழ்ந்தாள். தன்னை மணந்து கொள்ளும்படி பார்வதி தேவியை பாணாசூரன் வற்புறுத்தினான். காலப்போக்கில் பாணாசூரனின் தொல்லைகள் அதிகரிக்கவே அவனை வதம் செய்ய முடிவெடுத்தாள் தேவி.

விஜயதசமியன்று கன்னியாகுமரியில் இருந்து மகாதானபுரத்துக்கு ஆண் உடை தரித்து குதிரையில் ஏறிச்சென்று பாணாசுரனை வதம் செய்தாள். மீண்டும் கன்னியாகுமரி கடற்கரையில் தவக்கோலத்துடன் பகவதி அம்மனாக அருளாட்சி செய்து வருகிறாள்.

இக்கோயிலில் புரட்டாசி நவராத்திரி திருவிழா, வைகாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேரோட்டம், தெப்போற்சவ நாட்களில், ஏராளமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்வர்.

நேர்த்திக் கடனாக கன்னிகா பூஜை, சுயம்வர பூஜைகள் செய்வதும், கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதும் நடைபெறுகிறது.

Spread the love