புதுடெல்லி: நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடரும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகளை விதிக்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவிடம் அதிகளவில் எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகளான சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் மீது 100% வரை சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இம்மசோதா விரைவில் அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அவர் கையெழுத்திட்டவுடன் நடைமுறைக்கு வரும்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளதாவது: நாட்டின் 140 கோடி மக்களின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்வது தொடரும்.
நாட்டின் வர்த்தக, பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதன் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்திய தொழில் அமைப்புகளுடன் இணைந்து அரசு செயல்படும். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவின் முதன்மை கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 51.1 சதவீதத்தை ரஷ்யாவே வழங்கியுள்ளது.
இது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, வெனிசுலா, பிரேசில், ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் இணைந்து வழங்கியதை விட அதிகமாகும். இருப்பினும், எரிசக்தி கொள்முதலைப் பரவலாக்கும் முயற்சியாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்தும் கொள்முதல் செய்வதை இந்தியா அதிகரித்து வருகிறது.

More Stories
தங்கம் விலை அதிரடியாக ரூ.1,160 அதிகரிப்பு – என்ன காரணம்?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன..?
தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைவு