இஸ்லாமாபாத்: கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது என்றும், பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தேசிய அவையில் உரையாற்றிய அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ‘‘கடந்த காலத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது. ஆனால், தனது மூலோபாய நலன்களுக்காக அமெரிக்கா, பாகிஸ்தானை சுரண்டியது. அதன் நோக்கங்கள் நிறைவேறிய பிறகு, கழிப்பறை காகிதத்தைப் போல கருதியது.
1999க்குப் பிறகு குறிப்பாக, செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்து செயல்படுவதற்கு கொடுத்த விலை பேரழிவை ஏற்படுத்தியது. 2001க்குப் பிந்தைய காலகட்டத்தில், அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் போரில் பாகிஸ்தான் இணைந்தது. தாலிபான்களுக்கு எதிரான இந்த போருக்குப் பிறகு அமெரிக்கா வெளியேறியது. ஆனாலும், வன்முறை, தீவிரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுடன் பாகிஸ்தான் தொடர்ந்து போராடி வருகிறது.
மதக் கடமை காரணமாகவே ஆப்கனிஸ்தானுக்கு எதிரான மோதலில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக நாம் சித்தரித்தோம். ஜிஹாத்தில் ஈடுபட பாகிஸ்தானியர்கள் அனுப்பிவைக்கப்பட்டார்கள். இது தவறான வழிநடத்தலாகவும், கடும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்தது.
நாம் நமது வரலாற்றை மறுக்கிறோம். நாம் நமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதம் என்பது கடந்த காலத்தில் சர்வாதிகள் செய்த தவறுகளால் ஏற்பட்ட பின்விளைவு.
இரண்டு முன்னாள் ராணுவ சர்வாதிகாரிகள் (ஜியா உல் ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரஃப்) ஆப்கானிஸ்தான் போரில் இணைந்தனர். உண்மையில் இது இஸ்லாத்துக்காக அல்ல; மாறாக ஒரு வல்லரசை திருப்திப்படுத்துவதற்காக. இதனால், நாம் சந்தித்த இழப்புகள் ஏராளம். நாம் அதை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. மீள முடியாத தவறுகளை நாம் செய்துவிட்டோம். இந்த போர்களை நியாயப்படுத்த சித்தாந்த மாற்றங்களுடன் பாகிஸ்தானின் கல்வி முறையே மறுவடிவமைப்பு செய்யப்பட்டது’’ என தெரிவித்துள்ளார்.

More Stories
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கிய திருத்தங்கள்! – அமெரிக்கா நடவடிக்கை
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு
டிரம்ப் – நெதன்யாகுவால் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்: ஈரான் ராணுவம்