July 24, 2026

“காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் விசுவாசம் காட்டுகிறது தவெக” – அப்பாவு விமர்சனம்

சென்னை: “தமிழ்நாட்டில் தவெக ஆட்சி ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்பது போல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் விசுவாசம் காட்டுவதற்காக, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பது தான் ஜனநாயகமா சிஎம் சார்” என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவில் மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்களில் நீட் போன்ற தேர்வு நடைபெறுவதை எந்த மாநில அரசும் எதிர்ப்பதில்லை. அதுபோல் மாநில அரசுகளின் மாநில வரிப்பணத்தில் உருவாக்கி இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கைக்கு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதை கருணாநிதி முதல் மு.க.ஸ்டாலின் வரை தொடர்ந்து 10 ஆண்டு காலமாக எதிர்ப்பதோடு, தமிழக சட்டமன்றத்திலும் நீட் தேவையில்லை என இரண்டு முறை ஏக மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்த பெருமை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு.

இந்த உண்மையை புரிந்து கொண்ட இந்திய இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறவழியில் போராடி வருவதையும், ஒன்றிய அரசு காட்டுமிராண்டித்தனமாக அடக்கி, ஒடுக்குவதையும் தவெ‌க அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன் சி.எம் சார்?

தமிழ்நாட்டில், டெல்லி-நீட் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் மாணவர்கள், இளைஞர்களை கொடூரமாக அடக்கி, ஒடுக்கி கைது செய்வது ஏன்? அவர்களை மெரினாவில் போராட அனுமதிக்காதது ஏன்? பாஜக ஆட்சிக்கு காட்டும் விசுவாசமா?

இன்று இந்திய இளைஞர்கள் ஒன்றிய அரசின் அடக்குமுறையை தாங்கி பலநாள் உணவு, உறக்கமின்றி, உயிரை பணயம் வைத்து ஜனநாயக முறையில் போராடி வருவதை தமிழ்நாட்டில் கண்டு கொள்ளாத தவெ‌க அரசு இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து கொண்டாடி மகிழ்வது வெட்கக்கேடானது.

‘ஜனநாயகன்’ பட வசூலுக்காக கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய தண்ணீரை கேட்டு பெறாமலும், மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தடுக்க துணிவு இல்லாமலும் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை துரோகம் செய்வதுதான் வாக்களித்த மக்களுக்கு தாங்கள் காட்டும் பிரதிபலனா?

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்பது போல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் விசுவாசம் காட்டுவதற்காக, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பது தான் ஜனநாயகமா சிஎம் சார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love