சென்னை: மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது புகழ் வணக்கத்தை செலுத்தியுள்ளனர்.
குஜராத் மாநிலத்திம் போர்பந்தரில் 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்தவர் காந்தி. இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதால் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளான அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியாக கொண்டாப்படுகிறது. இன்றை தினம் காந்தியின் 157-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் தங்கள் புகழ் வணக்கத்தை செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் விஜய், “அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர், நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும், தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.
எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ்ந்தவர்.
மகாத்மா காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்” என்று முதல்வர் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், “My life is my Message: சத்தியத்தின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாத மகாத்மா காந்தியின் பிறந்தநாள். இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அவர் வாழ்க்கையில் பெற்ற ஒவ்வொரு அனுபவத்தையும் கொண்டு தொடர்ந்து தன்னைச் செதுக்கிக் கொண்டவர் காந்தியடிகள்.
தொடர்ந்து சமூகத்தோடு உரையாடினார். தொடர்ந்து தன்னையும் தன் கருத்துகளையும் மாறுபாட்டுக்கு உட்படுத்திக் கொண்டே வந்தார். ஆனால், உண்மையாக இருந்தார். அதனால்தான், ‘என் வாழ்க்கையே நான் விட்டுச் செல்லும் செய்தி’ என அவரால் கூற முடிந்தது.
அவரது பெருமையைப் போற்றும் வகையில், நமது திமுக ஆட்சியில் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தேன், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தைப் பழமை மாறாமல் புதுப்பித்தோம், உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுகளை மீண்டும் வழங்கத் தொடங்கினோம்.
காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! அவரிடம் இருந்து கற்போம்! மதநல்லிணக்கம் போற்றும் இந்தியாவைக் காப்போம்!” என்று கூறினார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராடி, இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவரும், அகிம்சை எனும் மந்திரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் வரலாற்றையே புரட்டிப் போட்டவருமான தேசத் தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் இன்று.
எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, சமூக சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் ஆகியவற்றோடு, சத்தியத்தை ஆயுதமாகவும், அகிம்சையைப் பாதையாகவும் கொண்டு, மானுட நலனுக்காகவும், உயர்வுக்காகவும் ஓயாமல் உழைத்த மகாத்மா காந்தியடிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.” என்று கூறியுள்ளார்.

More Stories
‘இரு மொழி கொள்கை விவகாரத்தில் விளையாட வேண்டாம்’ – தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் – பலன்கள் என்னென்ன?
“விஜயகாந்த் பற்றி பேசுவதை ஆதவ் அர்ஜுனா நிறுத்திக்கொள்ள வேண்டும்” – பிரேமலதா காட்டம்