October 1, 2026

“விஜயகாந்த் பற்றி பேசுவதை ஆதவ் அர்ஜுனா நிறுத்திக்கொள்ள வேண்டும்” – பிரேமலதா காட்டம்

கோவை: “எங்கள் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் விஜயகாந்த் ஆன்மா குறித்து பேசுவதற்கு அருகதையே கிடையாது” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (அக்.01) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாராபுரத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். யாராக இருந்தாலும் பெண்களைப் பற்றி தவறாகப் பேசுவதை எந்தக் காலத்திலும் அனுமதிக்க முடியாது. பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுபவர்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்தின் ஆன்மா குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். முதலில் ஆதவ் அர்ஜுனா எப்போதாவது விஜயகாந்தை நேரில் பார்த்திருக்கிறாரா?. விஜயகாந்தின் ஆன்மா என்றும் என்னைச் சுற்றி இருக்கும்.

அப்படியிருக்க, விஜயகாந்த் உடைய குடும்பத்துக்கும், கட்சிக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் அவரது ஆன்மா குறித்து பேசுவதற்கு அருகதையே கிடையாது. தம்பி ஆதவ் அர்ஜுனா இத்தோடு விஜயகாந்த் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பல குளறுபடிகள் நடப்பதாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர் மூலம் ஆட்சி மாறி இருக்கிறது. பழைய முறைப்படி தேர்தல் வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. வாக்குப்பதிவு இயந்திரத்தில் நிறைய தவறுகள் நடைபெறுகின்றன. நாளை நடைபெறும் கிராமசபைகூட்டங்களில், எங்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தடை செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வர இருக்கிறார்கள்.

பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நான்கு முதல் ஐந்து மடங்கு உயர்ந்து இருப்பதால் மக்கள் பாதிக்கின்றனர். விலைவாசி உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு போன்றவற்றை திரும்பப் பெற வேண்டும். மின்கட்டண பிரச்சினை, டாஸ்மாக் பிரச்சினை, பாலியல் வன்கொடுமை பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன.

கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் விஜய் இன்னும் நிறைவேற்றவில்லை. ரூ.2,500 பெண்களுக்கு கொடுக்க வேண்டும். பாமக இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாடு எடுத்திருப்பது மதுராந்தகத்தில் தவெகவுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Spread the love