கேரளத்தில் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் புறக்கணிக்கப்பட்டதால், பிரதமரின் நிகழ்ச்சியை புறக்கணிக்க பினராயி விஜயன் முடிவு
பிரதமர் மோடி | கேரள முதல்வர் பினராயி விஜயன்– சித்திரிப்பு
கேரளத்தில் பிரதமர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியின் அழைப்பிதழில் மாநில அமைச்சரின் பெயர் இடம்பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிகழ்ச்சியை புறக்கணிக்க முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் தொடக்க விழா, பிரதமர் மோடி தலைமையில் இன்று (மார்ச் 11) நடைபெறுகிறது.
நிகழ்ச்சியின் அழைப்பிதழில் முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் ராஜேஷ் மற்றும் கிருஷ்ணன்குட்டி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் முகமது ரியாஸின் பெயர் இடம்பெறவில்லை.
நிகழ்ச்சியின் பெயர்ப் பட்டியலில் முகமது ரியாஸின் பெயர் இடம்பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடியின் அரசு நிகழ்ச்சியை பினராயி விஜயன் உள்பட அமைச்சர்களும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அமைச்சர் முகமது ரியாஸ் பேசுகையில், நிகழ்ச்சியில் இருந்து என்னை விலக்கியது, கேரள மாநிலத்தை அவமதிப்பதற்குச் சமம். ஒரு முக்கியமான மாநிலத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ விழாவில் அத்துறை அமைச்சரை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக பாஜக தலைவரை நியமிப்பது என்பது ஜனநாயக விரோதம் மற்றும் நெறிமுறை மீறல் என்று பாஜக அரசு மீது குற்றம் சாட்டினார்.

More Stories
நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எவ்வளவு நாட்கள் நீடிக்க வாய்ப்பு?
“காஸ் சிலிண்டர் பிரச்சினையில் பீதி வேண்டாம், ஏனெனில்…” – மத்திய இணை அமைச்சர் ஷோபா
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது