September 15, 2026

கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு: ஒருவர் உயிரிழப்பு- இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட்!

கேரளா: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொழுபுழா தாலுகா அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் அப்பகுதியில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக அதிகாலை 2 மணியளவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரக்கோணத்தில் இருந்து விரைந்த 34 வீரர்கள் கொண்ட NDRF சிறப்புக் குழு, துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் உள்ளூர் தீயணைப்புத் துறை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கனமழை காரணமாக கோட்டயம், பத்தனம்திட்டா உள்பட 8 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா உட்பட கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மலைப்பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Spread the love