புதுடெல்லி: இத்தாலி பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லெட் பரிசளித்த பிரதமர் மோடி உள்நாட்டுத் தயாரிப்பு (சுதேசி) பொருள்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதற்கு, இந்தியாவின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. பிரதமரின் இந்த பேச்சு தங்களுக்குப் பெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்கள் அனைவரும் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டும் என்றும், அதுவே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் என்றும் வலியுறுத்தியிருந்தார். அப்போது, இந்தியர்களின் உணர்வோடு கலந்த உள்நாட்டு பிராண்டுகளுக்கு உதாரணமாக பார்லே நிறுவனத்தைக் குறிப்பிட்டு பேசினார்.
இது குறித்து பார்லே நிறுவனத்தின் துணைத் தலைவர் மயங் பிரவீன் சந்திர ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சுதேசி தயாரிப்புகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் போது எங்கள் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டது எங்களுக்குக் கிடைத்த பெரும் பெருமையாகும். இது ஒட்டுமொத்த பார்லே குடும்பத்திற்கும் ஒரு நெகிழ்ச்சியூட்டும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
உள் நாட்டுத் தொழில்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் பிரதமருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். மத்திய அரசு முன்னெடுத்து வரும் மேக் இன் இந்தியா மற்றும் உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் ஆகிய திட்டங்களுக்குப் பிரதமரின் இத்தகைய பேச்சு மேலும் வலுசேர்க்கும். இவ்வாறு ஷா தெரிவித்துள்ளார்.

More Stories
நடிகை ட்விஷா சர்மா மரணத்தை தற்கொலை கோணத்தில் விசாரிக்கிறோம்: போபால் மாநகர காவல் ஆணையர் தகவல்
எரிசக்தி சேமிப்பு முயற்சி: ஆய்வுப் பயணங்களை தவிர்க்க நாடாளுமன்ற குழுக்களுக்கு அறிவுறுத்தல்
செங்கோட்டையன் இலாகா மாற்றம் – தமிழக அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை?