November 19, 2026

சென்னை செம்மஞ்சேரியில் 124 ஏக்கரில் அமைகிறது ஒலிம்பிக் சிட்டி: கட்டிடக்கலை மற்றும் பொறியியல் ஆலோசனை நிறுவனங்களைத் தேர்வு செய்ய PWD டெண்டர் வெளியீடு!

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) உள்ள செம்மஞ்சேரியில், 124.31 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் சிட்டி அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக, கட்டிடக்கலை மற்றும் பொறியியல் ஆலோசனை நிறுவனங்களைத் தேர்வு செய்யத் தமிழகப் பொதுப்பணித்துறை (PWD) ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே விளையாட்டு நகரம் அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்ட செம்மஞ்சேரியில் உள்ள அதே இடத்தில்தான் இந்த ஒலிம்பிக் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் தரத்திற்கு ஏற்ப வடிவமைப்பு, கட்டிடக்கலை, பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை சேவைகளை வழங்கும் தகுதியான ஆலோசனை நிறுவனங்களைத் தேர்வு செய்வதே இந்த ஒப்பந்தப்புள்ளியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியான நிறுவனங்கள் தங்களது டெண்டர் ஆவணங்களைச் சமர்ப்பிக்க 2026 டிசம்பர் 21 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மஞ்சேரியில் அமையவுள்ள ஒலிம்பிக் சிட்டியுடன் சேர்த்து, தமிழகத்தின் ஐந்து முக்கிய இடங்களில் ஒலிம்பிக் மையங்களை (Olympic Centres) அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, செம்மஞ்சேரியில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ‘குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ (Global Sports City) திட்டத்தின் முதற்கட்ட ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் வீரர்களைத் தயார்படுத்தும் நோக்கில் விரிவான திட்ட அறிக்கையுடன் (DPR) புதிய வடிவில் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒலிம்பிக் சிட்டியில் 46 வகையான ஒலிம்பிக் விளையாட்டுப் பிரிவுகளுக்கான பயிற்சி அரங்குகள், உயர்தர விளையாட்டு வீரர்களை உருவாக்கும் உயர் செயல்திறன் பயிற்சி மையம் (High Performance Training Centre), விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்குவதற்கான நவீன குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. தாழ்வான பகுதியாகக் கருதப்படும் செம்மஞ்சேரியில் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், சிறப்பான மழைநீர் வடிகால் மற்றும் வெள்ள மேலாண்மைக் கட்டமைப்புகளும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

சர்வதேசத் தரத்திலான பயிற்சி வசதிகள், நவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு அறிவியல் மையங்களுடன் உருவாகவுள்ள இந்த ஒலிம்பிக் சிட்டி, தமிழகத்தின் விளையாட்டுத் துறையில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love