சேலம்: தவெக கட்சிக் கொடியின் கலரில் சேலத்தில் புதியதாக 26 அரசு பேருந்துகள் மக்கள் சேவையில் களமிறக்கப்பட்டுள்ளன.
சேலத்தில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதியதாக 26 நகர பேருந்துகளின் சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் இன்று தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் அனைத்தும், வழக்கமான நீல நிறத்துக்கு மாற்றாக, தவெக கட்சி கொடியில் உள்ள மஞ்சள், சிவப்பு நிற வர்ணங்கள் பூசப்பட்டு புதிய வழித்தடங்களில் களம் இறக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியின் போது அரசு பேருந்துகளில் பச்சை வர்ணம் பூசப்பட்டு இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி காலத்தில் அரசு பேருந்துகள் மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட்டு இயக்கப்பட்டன. இவ்வாறாக, புதிய ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப, அரசு பேருந்துகளின் நேரங்களும் மாற்றப்பட்டு வந்தன. எனினும் கடந்த சில ஆண்டுகளில் பேருந்துகளின் நிறம் பெரிய அளவில் மாற்றப்படவில்லை. நகரப் பேருந்துகள் யாவும் நீல வர்ணம் பூசப்பட்டு இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, சார்பில் தற்போது புதிய பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்படுகிறது. அதிலும் தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் சொந்த மாவட்டமான சேலத்தில், அரசு நகர பேருந்துகள் தவெக கட்சி கொடியின் நிறத்துக்கு ஏற்ப, மஞ்சள் சிகப்பு வர்ணங்கள் பூசப்பட்டு, மக்கள் சேவையில் களம் இறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பயணிகள் சிலர் கூறுகையில், “கடந்த கால ஆட்சியாளர்களுக்கு தாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த பேருந்து நிறமாற்றம் உணர்த்துகிறது” என்றனர்.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு: ஜி.கே.வாசன்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் ரத்து?
கடந்த ஓராண்டில் உடல் உறுப்பு தானம் வழங்கிய 312 கொடையாளர்களுக்கு தமிழக அரசு புகழஞ்சலி