சேலம்: சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக, அங்கிருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது.
மேலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கான முன்பதிவு அவகாசம் 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முதல் கட்டமாக, வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தியை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தத் தொடங்கியுள்ளன.
அதன் நீட்சியாக, சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் ஆலையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தமிழ்நாடு சமையல் எரிவாயு சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி செந்தில் செல்வன் கூறியதாவது:
இந்தியன் ஆயில் நிறுவனத் துக்கு 13 இடங்களிலும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 5 இடங்களிலும், இந்துஸ்தான் பெட்ரோலியத்துக்கு 3 இடங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் ஆலைகள் உள்ளன.
சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆலையில் இருந்து சேலம், தருமபுரி, ஓசூர், கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதில், கருப்பூர் ஆலையில் இருந்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளொன்று 40 லோடு அதாவது 14 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகத்துக்கு கொண்டு செல்லப்படும்.
அதேபோல, வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் 20 லோடு அதாவது சுமார் 6,300 சிலிண்டர்கள் விநியோகத்துக்கு எடுத்துச் செல்லப்படும். போர் காரணமாக, இந்தியாவுக்கு சமையல் எரிவாயு கொண்டு வருவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த காரணத்தால் கருப்பூரில் உள்ள ஆலையில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளதால், வர்த்தக சிலிண்டர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே விநியோகத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன, என்றார்.

More Stories
மாவட்டத் தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
சோழவந்தானில் ஈரான் போர் பிரச்சனையில் அமைதி நிலவ மத்திய அரசு தலையிடக் கோரி ஐக்கிய விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.