February 7, 2026

ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க மாநிலங்களவையில் அதிமுக எம்பி கோரிக்கை

ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க மாநிலங்களவையில் அதிமுக எம்பி கோரிக்கை

புதுடெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி தனபால் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய தனபால், ‘‘தமிழ்நாட்டின் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்படுதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் ஒருங்கே கோண்ட ஒரு தலைவராக மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவராக அவர் திகழ்ந்தார்.

திரைத்துறையில் பணியாற்றிய ஜெயலலிதா, தமிழக முதல்வராக உயர்ந்தவர். அவர் மக்களின் நம்பிக்கையை பெற்று பல முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெண்கள், ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் அன்பை பெற்றவராக அவர் இருந்தார். மக்களால் நான்; மக்களுக்காகவே நான் என்ற அவரது கொள்கை, அவரது அரசில் பிரதிபலித்தது.

தாலிக்கு தங்கம் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மழைநீர் சேகரிப்பு, மகப்பேறு உதவிகள், அம்மா கிளினிக், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா லேப்டாப், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள், பணிபுரியும் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டி, அம்மா குழந்தை பெட்டகம், அம்மா சிமெண்ட், அம்மா கிரைண்டர், மிக்சி, அம்மா டேபிள் பேன், அம்மா மருந்தகம்.. போன்ற திட்டங்களை வழங்கியவர் ஜெயலலிதா. இவை, உணவு பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு உதவியாக இருந்துள்ளன.

இட ஒதுக்கீட்டின் அளவை 69% உயர்த்தி அதை உறுதிப்படுத்திய ஜெயலலிதாவின் நடவடிக்கை இந்திய சமூக நீதி அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அவர் சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தைப் பெற்றார்.

ADVERTISEMENT

சட்டம் ஒழுங்கு, நிர்வாக ஒழுங்கு, தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி ஆகியவற்றை பாதுகாப்பதில் தன்னிகரற்றவராக விளங்கினார். அவருக்கு பாரத் ரத்னா விருதை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

தனபால் பேச்சுக்கு இடையே குறுக்கிட்ட மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசிடம் நீங்கள் கேட்கலாமே என கூறினார். அதற்கு, மத்திய அரசுக்கு கோரிக்கையாகவே இதை தெரிவிக்கிறேன் என தனபால் குறிப்பிட்டார்.

Spread the love