February 21, 2026

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆடையை களைந்து போராட்டம்

இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக பாஜக கண்டனம்

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆடையை களைந்து போராட்டம்

புதுடெல்லி: டெல்​லி​யில் நடை​பெறும் செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாட்​டில் நேற்று காங்​கிரஸ் தொண்​டர்​கள் மேலாடையை களைந்து போராட்​டம் நடத்​தினர்.

கடந்த 16-ம் தேதி தலைநகர் டெல்​லி​யில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு தொடங்​கியது. இந்த மாநாடு ஒட்​டுமொத்த உலகத்​தின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது.

இந்த சூழலில் 5-வது நாளாக நேற்று ஏஐ உச்சி மாநாடு நடை​பெற்​றது. அப்​போது இளைஞர் காங்​கிரஸை சேர்ந்த சிலர் அரங்​கம் 5-ல் திடீரென நுழைந்​தனர். பிரதமர் நரேந்​திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்​படங்​கள் அச்​சிடப்​பட்ட டி சர்ட்​களை அவர்​கள் அணிந்​திருந்​தனர். அந்த டி சர்ட்​களில், இந்​திய, அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தம், எப்​ஸ்​டீன் பைல் உள்ளிட்ட வாசகங்​கள் இருந்தன.

திடீரென இளைஞர் காங்​கிரஸ் தொண்​டர்​கள் டி சர்ட்டை களைந்து பிரதமர் மோடிக்கு எதி​ராக​வும் இந்​திய, அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தத்​துக்கு எதி​ராக​வும் கோஷமிட்​டனர். போராட்​டத்​தில் ஈடு​பட்ட காங்​கிரஸ் தொண்​டர்​களை டெல்லி போலீ​ஸார் கைது செய்து அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தினர். பின்​னர் அவர்​கள் விடுவிக்​கப்​பட்​டனர். போராட்​டத்தை முன்​னின்று நடத்​திய 5 பேரிடம் மட்​டும் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

இதுகுறித்து டெல்லி போலீ​ஸார் கூறும்போது, ‘‘மாநாடு நடை​பெறும் பாரத் மண்​டபத்​துக்​குள் நுழைய கியூஆர் கோடு அடங்​கிய பாஸ் தேவை. காங்​கிரஸ் தொண்​டர்​கள் எவ்​வாறு பாரத் மண்​டபத்​துக்​குள் நுழைந்​தார்​கள் என்​பது குறித்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது’’ என்றனர்.

பாஜக கண்​டனம்: மத்​திய அமைச்​சர் ராஜ்​நாத் சிங் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​தி​யா​வின் புகழுக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் வகை​யில் காங்​கிரஸ் தொண்​டர்​கள் ஏஐ உச்சி மாநாட்​டில் போராட்​டம் நடத்தி உள்​ளனர். அவர்​களது நடவடிக்​கையை இந்​தியா மட்​டுமல்ல, ஒட்​டுமொத்த உலக​மும் பார்த்​தது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

இதேபோல் மத்​திய அமைச்​சர்கள் கிரண் ரிஜிஜு, சிவ​ராஜ் சிங் சவு​கான் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக செய்​தித் தொடர்​பாளர் நளின் கோலி கூறும்​போது, “இந்​திய தேசிய காங்​கிரஸ் கட்சி தற்​போது இந்​திய விரோத காங்​கிரஸ் கட்​சி​யாக மாறி​விட்​டது’’ என்றார்.

பாஜக மூத்த தலை​வர் சம்​பித் பத்ரா கூறும்​போது, “எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி வீட்​டில் உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தப்​பட்​டது. இதில் சோனியா, பிரி​யங்கா உள்​ளிட்​டோரும் பங்​கேற்​றனர். இந்த கூட்​டத்​தில் டெல்லி ஏஐ மாநாட்​டில் போராட்​டம் நடத்த சதித் திட்​டம் தீட்​டப்​பட்​டது. தலை​மை​யின் உத்​தர​வின்​படி இந்த சதித் திட்​டத்தை இளைஞர் காங்​கிரஸ் தொண்​டர்​கள் நிறைவேற்றி உள்​ளனர்’’ என்று குற்​றம் சாட்​டி​னார்.

இளைஞர் காங்​கிரஸ் தேசிய தலை​வர் உதய் பானு சிப் கூறும்​போது, “இந்​திய, அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தத்​தில் பிரதமர் மோடி அமெரிக்​கா​விடம் சரண் அடைந்​துள்​ளார். இந்த ஒப்​பந்​தத்​தால் இந்​திய விவ​சா​யிகள் பாதிக்​கப்​படு​வார்​கள். ஜனநாயக நாட்​டில் எங்கு வேண்​டு​மா​னாலும் போராட்​டம் நடத்த உரிமை இருக்​கிறது. டெல்லி ஏஐ மா​நாட்​டில் இளைஞர் காங்​கிரஸ் தொண்​டர்​கள் ஜனநாயக முறை​யிலேயே போ​ராட்​டம் நடத்​தினர்’’ என்று தெரி​வித்​தார். மேலாடை இன்றி போ​ராட்​டம் நடத்​திய காங்​கிரஸ் தொண்​டர்​களை பொது​மக்​கள்​ அடித்​து விரட்​டினர்​. இது தொடர்​பான வீடியோக்​கள்​ சமூக வலைதளங்​களில்​ வைரலாக பரவி வருகின்​றன.

Spread the love