September 4, 2026

தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 உயர்வு

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (செப்.4) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது.

அதுவும் கடந்த சில நாட்களாக தொடர் வீழ்ச்சியை சந்தித்துவந்த தங்கம் விலை செப்.3, 4 என இரண்டு நாட்களில் அதிரடியாக உயர்ந்துள்ளது. செப்.3 பவுனுக்கு ரூ.2,320 உயர்ந்த நிலையில் இன்று (செப்.4) பவுனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.3,280 விலையுயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360-க்கும், பவுனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,14,880-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் சுத்தத் தங்கம், ஒரு கிராம் ரூ.15,665-க்கும், பவுன் ரூ.1,25,320-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.

Spread the love