சென்னை: தமிழக பாஜக 2024-ல் தவறவிட்ட கூட்டணியால், இன்று டெல்லியில் பெரும்பான்மைக்காக பிறகட்சிகளின் கதவைத் தட்டும்சூழல் உருவாகி உள்ளதாக பாஜக தன்னார்வத் தொண்டு நிறுவன பிரிவின் மாநில அமைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றி முழுமையான வெற்றி பெற்றது.
திமுக கூட்டணி 46.97 சதவீத வாக்குகளைப் பெற்றது. தனித்தனியாகப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 23.05 சதவீத வாக்குகளையும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 18.28 சதவீத வாக்குகளையும் பெற்றன. அதிமுக – என்டிஏ கூட்டணி தேர்தலுக்கு முன்பே உருவாகி இருந்தால் மொத்த வாக்கு வங்கி 41.33 சதவீதமாக இருந்திருக்கும்.
மேலும், தருமபுரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர் ஆகிய 6 தொகுதிகளில் இக்கூட்டணிக்கு நேரடி வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். குறிப்பாக கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிரமான களப்பணியின் மூலம் 4,50,132 வாக்குகளை பெற்றார். அதே தொகுதியில் அதிமுக 2,36,490 வாக்குகளைப் பெற்றது.
தலைமுறையின் அரசியல்
இவ்விரு வாக்குகளையும் சேர்த்தால், அது திமுக பெற்ற வாக்குகளைவிட ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகமாகும். தனிப்பட்ட அரசியல் எழுச்சி என்பது கூட்டணி பலத்தோடு இணையும்போதுதான் அது முழுமையான வெற்றியாக மாறும் என்பதற்கு கோவை ஒரு சிறந்த உதாரணம்.
இந்தக் கூட்டணி மூலம் குறைந்தபட்சம் 15 தொகுதிகள் வரை கடும் போட்டியை உருவாக்கியிருக்க முடியும். அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்திலிருந்து ஒருவலுவான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்திருக்கும். தமிழகத்தில் இந்த வாய்ப்பு நழுவியது மாநில அளவில் மட்டுமல்லாமல், டெல்லி அரசியலிலும் எதிரொலித்துள்ளது.
பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்துவது, எதிர்கால தொகுதி மறுவரையறை போன்ற முக்கிய தேசிய விவகாரங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்க வலுவான பெரும்பான்மை அவசியம். தமிழகத்திலிருந்து வலுவான ஆதரவு கிடைத்திருந்தால், இன்று டெல்லி அரசியல் சூழல் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களின் தரம் இன்னும் ஆக்கப்பூர்வமாக இருந்திருக்கக்கூடும்.
ஆனால், டெல்லியில் பெரும்பான்மைக்காக பிற கட்சிகளின் கதவைத் தட்டும் சூழல் இன்று உருவாகி உள்ளது. தமிழகத்தில் முன்பே சரியாக எடுக்கத் தவறிய அரசியல் முடிவு, ஒரு தேர்தலை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் அரசியல் திசையையே மாற்றக்கூடும் என்பதை இவை உணர்த்தியுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
‘காவல் மரணம், விலைவாசி, மின்கட்டண உயர்வு’ – தவெக அரசுக்கு பிரேமலதா கண்டனம்
“மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க வேண்டும்” – அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இந்த ஆண்டு 70,485 பேர் விண்ணப்பம்..