“தவெகவுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாததால், திமுக எம்எல்ஏக்களைப் பதவி விலகச் செய்ய முதல்வர் விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு திமுக புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாகத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரனும், சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வனும், திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
சட்டப்படி அவர்கள் இருவரும் திமுகவின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட்ட உறுப்பினர்கள். இந்நிலையில், ஜூன் 27 அன்று சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் விஜய் தனது பட்டினப்பாக்கம் இல்லத்தில், இந்த 2 திமுக எம்எல்ஏக்களையும் குதிரை பேரம் மூலம் பதவி விலகச் செய்யுமாறு தன்னிடம் கோரியதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், ராஜினாமா செய்யும் பட்சத்தில், இடைத்தேர்தலில் அவர்களுக்குத் தவெக ஆதரவளிக்கும் என்று முதல்வர் உறுதியளித்ததாக வைகோ பேசியுள்ளார். கூட்டுச் சதியாளர்களில் ஒருவரான வைகோவின் இந்த வாக்குமூலம், முதல்வர் விஜய் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி குதிரை பேரத்தில் நேரடியாக ஈடுபட்டதை அம்பலப்படுத்துகிறது. இதுதொடர்பான காணொளிப் பதிவுகளும் இப்புகாரோடு இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ள தவெக அரசுக்கு சட்டபேரவையில் முழுமையான பெரும்பான்மை இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கவும், எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாகவே, அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகளான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், எஸ்.ஜெயகுமார், பி.சத்யாபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்துப் பதவி விலகத் தூண்டப்பட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் புனிதத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில் இந்த ராஜினாமாக்கள் பண பலத்தாலோ அல்லது அதிகாரத் துஷ்பிரயோகத்தாலோ நிகழ்ந்துள்ளனவா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
லலிதா குமாரி விஷ்ணு எதிர் உத்தரப்பிரதேச அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஒரு அறியத்தக்க குற்றம் நடந்துள்ளதாகப் புகார் வரும்போது, சம்பந்தப்பட்ட நபர் முதல்வராகவே இருந்தாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது கட்டாயமாகும். சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறினால் அது ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைத் தகர்த்துவிடும்.
எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு, முதல்வர் விஜய் மற்றும் மதிமுக.பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மூலமாக வழக்குப்பதிவு செய்து, நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

More Stories
துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி: அதிமுக மகளிரணி கூட்டத்தில் பழனிசாமி கருத்து
முதல்வர் விஜய் வெற்றி பெற்ற பெரம்பூரை முன்மாதிரி தொகுதியாக மாற்ற திட்டம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு
காதல் என்ற பெயரில் கட்டுப்பாடு விதிப்பது அராஜகம்: சிங்கப்பெண் அதிரடிப்படை தலைவர் பவானீஸ்வரி பேச்சு