Chief Minister Vijay Assembly Speech: திமுக தயவால் தான் தவெக ஆட்சி நடக்கிறது என்று எதிர்க்கட்சியினர் வைத்து வரும் விமர்சனத்திற்கு, தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 17வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் கடந்த 18 ஜூன் 2026 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பிறகு, ஜூன் 19 மற்றும் ஜூன் 22 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
அந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சட்டசபை நிறைவு நாளான இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார்.
அப்போது, திமுக தயாவால் தான் தவெக ஆட்சி நடக்கிறது என்று எதிர்க்கட்சியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் தனிப்பெரும்பான்மையாகவே வெற்றிப் பெற்றது. இருப்பினும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை (மேஜிக் நம்பர் – 118) பெறமுடியாமல் போனதால் சற்று தடுமாறி நின்றது தவெக.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடது சாரிகள், ஐயூஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தன. இதையடுத்து, 118 என்ற பெரும்பான்மையோடு கடந்த 10 மே 2026 அன்று முதலமைச்சரானார் தவெக தலைவர் விஜய். பின்னர், சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக அதிக வாக்குகளை பெற்று ஆட்சிக் கட்டிலில் தொடர்ந்தது.
தவெகவின் வாக்குறுதியான ஆட்சியிலும் பங்கு, அதிகாரித்திலும் பங்கு என்பதை நிறைவேற்றும் விதமாக ஆதரவு அளித்த கட்சிகளுக்கு தமிழக அமைச்சரவையில் இடம்கொடுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை தவெக ஆட்சி அமைப்பதற்காக திமுக தான் அனுப்பி வைத்ததாக விமர்சனம் செய்யப்பட்டது. அதாவது, திமுகவின் தயவால் தான் தவெக ஆட்சி நடக்கிறது என்று சொல்லப்பட்டது. தற்போது, அந்த விமர்சனத்துக்கு தான் சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பதிலடி கொடுத்தார்.
அவர் பேசியதாவது, சாமானிய மக்களுக்கான ஆட்சியாக தவெக ஆட்சி உள்ளது. பெரியார் சொன்னதில் நமக்கு ஏற்புடையதை மட்டும் எடுத்துக்கொண்டோம். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தோம். தவெகவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதையும் வெளிப்படையாக கொள்கை அறிவித்தோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கொள்கையாக அறிவித்துதான் அரசியலுக்கே வந்தோம்.
கொள்கை எதிரி, அரசியல் எதிரியை அறிவித்தோம். தேர்தலில் கூட்டணியே இல்லாமல், தனித்தே போட்டியிட்டோம். தனித்து போட்டியிட்டே 35% வாக்குகளை பெற்றோம். இந்த 2026 தேர்தலின் மூலமாக யாராலும் ஒழுக்கவே முடியாது என்ற சொன்ன சாதி, மதத்தை ஒழித்தோம். அதைத்தொடர்ந்து, ஓட்டுக்கு பணம் என்ற நச்சு கலாச்சாரமும் ஒழிக்கப்பட்டது. இங்கு சிலர் திமுக தயவால் தவெக ஆட்சி நடக்கிறது என்று சொல்கிறார்கள்.
திமுக தயவால் அல்ல. தமிழக மக்களின் தயவால் தவெக ஆட்சி நடக்கிறது என்று கர்ஜித்த படி முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். இதற்கு ஒட்டுமொத்த சட்டசபையுமே அதிர்ந்தது. திமுகவினர் வெளிநடப்பு செய்து விட்டனர். இதையடுத்து, சட்டசபை தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு மத்தியில் திமுக சொல்லி தான் ஆதரவு என்ற விமர்சனத்திற்கு, ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு கொடுத்திருப்பதாக இடது சாரிகள் ஏற்கனவே தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வெளியிட பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிரன வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
எரிசக்தி துறையில் 401 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்
இறால் பண்ணை, வேதித் தொழிற்சாலைகளில் அவசர ஆய்வு நடத்த வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்