November 27, 2026

தீபத்தூணில் தீபம் ஏற்றுவது ; திருப்பரங்குன்றம் ஸ்தானிக பட்டர்கள் மறுப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்றுமுன்தினம் ஏற்றப்படவில்லை. இதுகுறித்து விளக்கமளித்த கோயில் நிர்வாகம், ஆகமவிதிப்படியும், ஸ்தானிக பட்டர்களின் கருத்து அடிப்படையில் ஏற்றப்படவில்லை என தெரிவித்தது. இதுதொடர்பாக தங்களிடம் கலந்தாலோசிக்க வில்லை என ஸ்தானிக பட்டர்கள் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இது குறித்து கோயில் சார்பில் ஒரு விளக்க அறிக்கை தரப்பட்டிருந்தது. அதில் உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்தின் அருகே தீபம் ஏற்றப்பட்டதற்கு கூறப்பட்ட காரணங்களில் ‘ஸ்தானிக பட்டர்களின் கருத்துக்களின் அடிப்படையில்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு ஸ்தானிக பட்டர்கள் சுவாமிநாதன், பாலசுப்பிரமணியன், சொக்கு சுப்பிரமணியன், ஷண்முகசுந்தரம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து கோயில் துணை கமிஷனர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், ‘திருக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக. நாங்கள்

எந்த ஒரு கடிதமும் வழங்கவில்லை. உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தான் தபால் அளித்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.உச்சநீதிமன்றஉத்தரவின் படி மலை மேல் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாகநாங்கள்எந்த ஒரு கருத்தும் கூறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தாங்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் எங்களை கலக்காமல் எங்களது பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மன வேதனையை தருகிறது’ என குறிப்பிட்டு உள்ளனர். இந்த கடிதங்கள் வெளியானபின் அறங்காவலர் குழுவினர், அறநிலையத்துறையினர் இணைந்து பட்டர்களை கடிதத்தை வாபஸ் பெறும்படி வலியுறுத்துவதாக தகவல் வெளியானது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், சரவணன், சரவணகுமார், வெற்றிவேல்முருகன், ராஜேஸ்வரன், அருண் கூறியதாவது: இன்று (நேற்று) காலை முதல் ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன் வீட்டில் கோயில் துணை கமிஷனர் செல்வி, கண்காணிப்பாளர் ரஞ்சனி, எழுத்தர் மணிமாறன், அறங்காவலர் குழு தலைவர் சண்முகசுந்தரம், மற்றொரு அறங்காவலர் வந்துள்ளனர். ஸ்தானிக பட்டர்களை மிரட்டி அவர்கள் வெளியிட்ட கடிதத்திற்கு மறுப்பு கடிதம் கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இந்த தகவலறிந்து இரவு சுவாமிநாத பட்டர் வீட்டுக்கு நாங்கள் சென்ற பொழுது, சண்முகசுந்தரம், செல்வி, ரஞ்சனி, மணிமாறன் அங்கு இருந்தனர். ‘ரகசிய கூட்டம் நடத்துகிறீர்களா, அலுவலகம் சம்பந்தமான விஷயமாக இருந்தால் கோயில் அலுவலகத்திலேயே பேசிக் கொள்ளலாமே’ என கேட்டோம்.

சுவாமிநாத பட்டர் ‘அவர்கள் எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்துள்ளனர்’ என தெரிவித்தார். நாங்கள் போலீசார் மூலம் வெளியேற்றப்பட்டோம்’ என்றனர். சுவாமிநாத பட்டர் வீட்டு முன்பு அவர்கள் நின்றிருந்த போது ராமலிங்கம் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். 15 நிமிடங்கள் கழித்து துணை கமிஷனர், கண்காணிப்பாளர், எழுத்தர், சுவாமிநாத பட்டர் வீட்டில் இருந்து வெளியே சென்றனர்.

Spread the love