July 2, 2026

தெலங்கானாவில் ‘புஷ்பா’ பட பாணியில் கடத்த முயன்ற ரூ.2.62 கோடி கஞ்சா பறிமுதல்

ஹைதராபாத்: புஷ்பா திரைப்படப் பாணியில் தெலங்கானாவில் ரூ.2.62 கோடி மதிப்பிலான 525 கிலோ கஞ்சா கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது.

தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சாரபாக்கா எனும் இடத்தில் “ஈகல்’ அதிரடிப்படை மற்றும் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் பேரில் போலீஸார் சோதனையிட்டனர்.

அப்போது, அதில் ‘புஷ்பா’ திரைப்படப் பாணியில் கண்டெய்னர் லாரிக்குள் 2 அடுக்கு இரும் புத்திரை அமைத்து, அதற்குள் 525 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்தி செல்வது தெரியவந்தது. உடனே அந்த லாரியையும், அதில் இருந்தவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஒடிஷாவை சேர்ந்த சஹதேவ் பாண்டில் என்பவர், அந்த மாநிலத்தில் உள்ள அல்லூரி கோட்டை வனப்பகுதியில் கூலி ஆட்களை வைத்து கஞ்சாவை சட்ட விரோதமாக பறித்துள்ளார். இதனை அதே கூலி ஆட்களை வைத்து ஆந்திர மாநிலம், துலசி பாக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கிருந்து இவை புஷ்பா கண்டெய்னர் மூலம் உத்தர பிரதேச மாநிலத் துக்கு கடத்தும் பணிகள் நடந்தன.

இது பத்ராசலம், கம்மம், வாரங்கல், ஆதிலாபாத் வழி யாக உத்தர பிரதேசத்துக்கு கடத்த திட்டமிடப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கொத்தகூடம் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலால் இந்த வாகனம் சோதனை செய்யப்பட்டு, 525 கிலோ கஞ்சாவுடன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வாகனத்துக்கு எஸ்கார்ட் போல் முன்னால் வந்த ஒரு பைக் மற்றும் 5 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக சஹதேவ் பாண்டில், ஆந்திராவைச் சேர்ந்த திரிநாத், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குல்தீப் ஷர்மா உட்பட ஒரு சிறுவனையும் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர் தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Spread the love