October 31, 2026

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் விழா சென்னை அருங்காட்சியக அரங்கில் கொண்டாட்டம்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பின்படி, நவம்பர் 1ம் நாள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவாகச் சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் காலை 10 மணி அளவில் கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழாவில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், 5 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்தமைக்கான நூலுரிமைத்தொகை வழங்கிடவும், திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிடவும், தமிழ்ச் செம்மல் விருதுகள் 76 அறிஞர்களுக்கும் வழங்கியும் சிறப்பிக்க உள்ளார்.

மேலும், நவம்பர் 1ம் நாள் மாலை தமிழ்நாடு நாள் விழாவையொட்டி கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பான முறையில் நடத்தப்படும். தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Spread the love