June 10, 2026

நிதி ஆயோக், என்டிஏ கூட்டங்கள் புறக்கணிப்பு: டெல்லி செல்லாத புதுவை முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி இம்முறையும் டெல்லி செல்லவில்லை என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இன்று நடக்கும் என்டிஏ கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தையும் புறக்கணித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையும் கொண்டாடும் வகையிலும் பிரதமர் மோடி, இந்தியாவின் நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் பிரதமர் என்ற சாதனையை இன்று (ஜூன் 10) படைக்கிறார். இதையொட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று என்டிஏ கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.

இதில் என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக உயர் மட்டத் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி 2 வது முறையாக ஆட்சியை அமைத்துள்ளது. ஆனால் தேர்தலில் வென்ற பிறகு முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்லவில்லை.

இந்நிலையில் என்டிஏ தலைவராக புதுச்சேரியில் உள்ள முதல்வர் ரங்கசாமி இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். அத்துடன் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வர் விஜய் இக்கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கடந்த பல ஆண்டுகளாக பங்கேற்பதில்லை. முதல்வர் ரங்கசாமி இக்கூட்டத்தில் பங்கேற்க விமான டிக்கெட் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. முக்கியமான நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர்கள் பங்கேற்க மத்திய அரசு கடிதம் அனுப்பியும் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love