September 24, 2026

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் ரத்து?

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையை முதல்வர் விஜய் ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் திட்டம் ரத்து குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக தலைமைச் செயலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு அறிவித்திருந்தது. 1,200 கோடி ரூபாய் செலவில் 25.55 ஏக்கர் பரப்பில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக செப்டம்பர் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் உள்ள கடற்கரையை முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தவும் மீன் வலைகளை உலர்த்தவும் பயன்படுத்திவருகின்றனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என மீனவர்கள் போராடி வருகின்றனர்.

2004-ல் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பகுதியிலேயே தலைமைச் செயலகம் அமைக்கப்பட இருப்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. இத்தகைய காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த அரசாணை திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் வேறு இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதல்வர் விஜய் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பட்டினப்பாக்கம் திட்டத்தை ரத்து செய்ய பொதுத்துறை செயலாளருக்கு முதல்வர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாகவும், தலைமைச் செயலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய இடம் குறித்த விவரத்துடன், புதிய அரசாணை வெளியிட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Spread the love