ஒட்டன்சத்திரம், நவ-2
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பலக்கனூத்து ஊராட்சியில், ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வட்டார ஊராட்சி பற்றாளராகப் பணியாற்றும் பணி மேற்பார்வையாளர் தலைமையில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளையும், குறைகளையும் முன்வைத்தனர்.
அப்போது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து உரிய வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்றும், ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க முன்கூட்டியே எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தனர்.
இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார ஊராட்சி பற்றாளர் மற்றும் ஊராட்சி செயலர் வீரபாண்டி உள்ளிட்டோர் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
இருப்பினும், ஊராட்சியில் அடிப்படை வசதிகளை முறையாகச் செய்து கொடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் குறைகளை உடனடியாகக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பலக்கனூத்து கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More Stories
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ரத்ததான முகாம்
சமூக ஆர்வலர் ஈபி சரவணன் சார்பில் தீபாவளி திருநாள் உதவிகள் வழங்கும் விழா
கரூர் மாநகராட்சிப் பகுதியில் தரைக்கடை வியாபாரிகளிடம் முறைகேடாகப் பணம் வசூல்: த.வெ.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!