மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2019-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் சீர்மரபினருக்கான சாதிச் சான்றிதழ் டிஎன்டி என்ற ஒரே பெயரில் வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.
ஆனால், நடைமுறையில் டிஎன்டி/டிஎன்சி என இருவகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதனால் பழங்குடியினர் பிரிவில் வருபவர்கள் மத்திய அரசின் நலத் திட்டங்களைப் பெற முடியாத நிலை உள்ளது.
குற்றப் பரம்பரைச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னரும், அவர்களை அறிவிப்பு நீக்கப்பட்ட பழங்குடிகள் (டி நோட்டி பைடு டிரைப்ஸ்) என்று அழைப்பது சட்டவிரோதமாகும்.
அவர்களை மரியாதைமிக்க பூர்வீக பழங்குடிகள் (டிக்னிலைடு நேட்டிவ் டிரைப்ஸ்) என்று அழைக்க வேண்டும். எனவே சாதிச் சான்றிதழ் வழங்கும்போது, அறிவிப்பு நீக்கப்பட்ட பழங்குடிகள் என்பதை, மரியாதைமிக்க பூர்வீக பழங்குடிகள் என்று வழங்கவும், அவர்களுக்கு தேசிய அளவில் தனி இட ஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
அரசிடம் முறையிடலாம்… இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து, “இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது என்பதால், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. மனுதாரர் அரசிடம் முறையிட்டு நிவாரணம் பெறலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டது.

More Stories
ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
“ரூ.1500 கோடி லஞ்சம்… மனமகிழ் மன்ற உரிமம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை” – அன்புமணி
கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணி: அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு