August 12, 2026

மதுரை நெகிழ்ச்சி: ரூ.60 லட்சத்தை ராணுவத்துக்கு வழங்கிய சுப்பையாவுக்கு குவியும் பாராட்டு!

மதுரை: தனக்காக எந்த வசதியையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் சிறிய வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு பல ஆண்டுகளாக சேமித்த பணத்தை எல்லாம் திரட்டி ராணுவத்துக்காக ரூ.60.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய முதல்வரின் செயலால் நெகிழ்ந்த பலரும் வீடுதேடிச் சென்று அவரை வாழ்த்தி வருகின்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த வாராந் திர குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, வழக்கம்போல் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, மனு கொடுப்போர் வரிசையில் வந்த 82 வயது முதியவர் ஒருவர் திடீரென ஆட்சியரிடம் வந்து, தனது கையில் இருந்த காசோலை, உயில் ஆவணம் ஒன்றை வழங்கினார்.

ஒரு நிமிடம் திகைத்த ஆட்சியர், அவரிடம் என்னவென்று கேட்டார். ராணுவ வீரர்களுக்கு கொடிநாள் நிதியாக என்னுடைய வாழ்நாள் சேமிப்பு பணம், நகைகளுக்குரிய ரூ.60 லட்சத்துக்கான உயிலையும், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கு வதாக அந்த முதியவர் தெரிவித்தார்.

அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த ஆட்சியர், எதற்காக இவ்வளவு தொகையை கொடிநாள் நிதியாக கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், எனக்கென்று யாரும் இல்லை, நான் ஒரு ஆதரவற்றவன், எனக்கு பிறகு இந்த பணம் நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக கொடிநாள் நிதியாக வழங்குகிறேன் என்றார்.

இதையறிந்து கூட்டரங்கில் இருந்த அனைத்து துறை அதிகாரிகள், மனு கொடுக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் முதியவரின் செயலைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்து கைதட்டியும், கரகோஷம் எழுப்பியும் பாராட்டினர்.

கொடிநாள் நிதியாக ரூ.60.10 லட்சம் வழங்கிய அந்த முதியவர், மதுரை ஹார்விபட்டியை சேர்ந்த பி.சுப்பையா. இவரின் செயலை அறிந்து நேற்று காலை முதலே ஏராளமானோர் வீடு தேடிச்சென்று பாராட்டி வருகின்றனர்.

மதுரை வடக்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.பாலாஜி, கவுன்சிலர் உசிலை சிவா உள்ளிட்ட பலருடன் சென்று சுப்பையாவை சந்தித்து வாழ்த்தினார். பாலாஜி கூறுகையில், ‘சுப்பையாவை சந்தித்த பின்னர்தான் அவர் எந்தளவுக்கு எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பது தெரிந்தது.

தற்போது வரை மிகச்சிறிய வாடகை வீட்டில் வசிக்கும் அவர் தினசரி ரூ.50 செலவில் சாப்பிடுகிறார். மற்ற பணத்தை எல்லாம் சேமித்து நாட்டுக்காக அளித்துள்ளார். தனக்கென எதைப்பற்றியும் சிந்திக்காமல் இந்தநன் கொடையை அளித்துள்ளது மிகப்பெரிய விஷயம்’ என்றார்.

சுப்பையா கூறுகையில், எனக்கு குழந்தைகள், உறவினர் யாரும் இல்லை. மனைவியும் 2013-ல் இறந்து விட்டார். நான் ஒரு முன்னாள் படை வீரர். தூங்காமல், சரியாக சாப்பிடாமல் இரவு, பகலாக மழை, வெயில் பாராமல் நாட்டு மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிற முன்னாள் படை வீரர்களுக்கு உதவுவதே சரியானது எனக் கருதினேன்.

எனக்கென எந்த தேவையும் இல்லை. வங்கியில் பணம், நகையாக இருந்ததால் அனைத்தையும் நன்கொடைக்காக உயில் எழுதி ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டேன். நான் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சேமிப்பில் 1 சதவீதத்தை ராணுவ வீரர்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.

மக்கள் அனைவரும் கொடிநாள் நிதி வழங்க மத்திய அரசு தனி சட்டத்தை இயற்றினாலும் தவறில்லை. நான் இறந்தபிறகு என் உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக உடல் தானமும் செய்துள்ளேன், என்று கூறினார்.

Spread the love